புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக, ஆளும் மாநில முதல்வர் பெமா காண்டு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சுமார் ரூ.1,270 கோடி மதிப்புள்ள அரசுப் பணிகளைத் தனது குடும்பத்தினருக்குத் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ‘சேவ் மோன் ரீஜியன் பெடரேஷன்’ மற்றும் ‘வாலண்டரி அருணாச்சல் சேனா’ ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்,”முதல்வரின் மனைவிக்குத் தொடர்புடைய பிராண்ட் ஈகிள்ஸ் மற்றும் பிரண்டியர் அசோசியேட்ஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட நிறுவனங்களுக்கே பெரும்பாலான ஒப்பந்தங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து மாநில அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,”அருணாச்சலப் பிரதேசத்தில் முதல்வர் பெமா காண்டுவின் குடும்பத்தினருக்குத் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது குறித்து சிபிஐ முதற்கட்ட விசாரணையைத் தொடங்க வேண்டும். கடந்த 2015ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த விசாரணையை சிபிஐ இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தொடங்க வேண்டும். இதுதொடர்பான தற்போதைய நிலை குறித்த அறிக்கையை 16 வாரங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விசாரணைக்கு அருணாச்சலப்பிரதேச அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்காகத் தலைமைச் செயலாளர் ஒரு தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். மேலும், இந்த ஒப்பந்தங்கள் தொடர்பான எந்தவொரு ஆவணங்களையும் அழிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தில் இந்த உத்தரவால் முதல்வர் பெமா காண்டுவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
