பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம்: பிரதமர் மோடி தகவல்

 

புதுடெல்லி: பொது சிவில் சட்டம் மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகிய இரண்டையும் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜவின் நிறுவன நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வீடியோகான்பரன்ஸ் மூலமாக ஆற்றிய உரையில்,” எமர்ஜென்சி போன்ற பல இன்னல்களையும், அந்த பழமையான கட்சியின் ஆட்சியின் கீழ் பல அடக்குமுறைகளையும் பாஜ தொண்டர்கள் எதிர்கொண்டு கடந்து வந்துள்ளனர். மேற்கு வங்கம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் வன்முறையே ஒரு அரசியல் கலாச்சாரமாக மாறிவிட்ட சூழலில் பல பாஜ தொண்டர்கள் தங்களது உயிரையே தியாகம் செய்துள்ளனர். எங்களின் லட்சியப் பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பொது சிவில் சட்டம் மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகியவை குறித்து நாட்டில் தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த இரண்டு விஷயங்களிலும் நாங்கள் ஆக்கப்பூர்வமான திசையிலேயே முன்னேறி வருகிறோம். ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்வதற்கு பாஜ உண்மையாகவே முயன்று வருகின்றது என்பதையும், தொடர்ந்து அவ்வாறே செயல்படும் என்பதையும் நாடு நன்கு அறியும். கடந்த காலங்களில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் அத்தகைய வெற்றிகள் நிச்சயம் சாத்தியமாகும். தொண்டர்கள் தங்கள் கட்சியை தாயாகவே கருதிப்போற்றும் ஒரே அரசியல் கட்சி பாஜ மட்டுமே. அதனால் தான் கட்சியின் நிறுவன நாள் என்பது வெறும் ஒரு அரசியல் நிகழ்வு மட்டுமல்ல. அது ஒவ்வொரு தொண்டருக்கும் ஒரு உணர்வுபூர்வமான தருணமாகும். தேசத்திற்கு சேவையாற்றும் வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய கட்சிக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக்கொள்ள இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது ” என்று தெரிவித்தார்.

 

Related Stories: