தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டப்பேரவை தேரல் நடைபெற உள்ள நிலையில். திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் சென்னையைச் சேர்ந்த சத்தியகுமார் என்பவர் போட்டியிடுகிறார். அவரை மாற்றக்கோரி திருத்தணி தவெகவினர் தேர்தல் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், வேட்பாளர் சத்தியகுமார் தனி நபராக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, திருத்தணி நகர வீதிகளில் தனி ஒருவராக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால், தவெகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, அக்கட்சி தலைமை நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து வேட்பாளருக்கு ஒத்துழைப்பு தர முன்வந்தனர். திருத்தணியில் நேற்று நிர்வாகிகள் மத்தியில் பேசிய அக்கட்சி வேட்பாளர் சத்திய குமார், ‘‘தமிழ்நாட்டில் உள்ள (234 தொகுதிகள்) என்பதை 2034 தொகுதிகளிலும் தவெக வெல்லும்’’ என்று தெரிவித்தார். இந்த பேச்சை அவரே சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல், ஆந்திரா பஸ்சில் சென்ற அம்மாநிலத்தவர்களிடம் சத்திய குமார் ஓட்டு கேட்டார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். எந்த மாநிலத்துக்கு தேர்தல் நடக்குது, யார்கிட்ட ஓட்டு கேட்கணும்னு கூட தெரியல… எவ்வளவு தொகுதி இருக்குனு கூட தெரியல.. இந்த சத்தியகுமாரை வச்சுகிட்டு நமக்கு பெரும் சத்திய சோதனைதான் என்று போர்க்கொடி தூக்கிய தவெகவினரே புலம்பி வருகின்றனர்.
