×

நாட்டில் சமாதானமும், ஒற்றுமையும், சகோதரத்துவமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும்: தலைவர்கள் ஈஸ்டர் வாழ்த்து

சென்னை: நாட்டில் சமாதானமும், ஒற்றுமையும், சகோதரத்துவமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என தலைவர்கள் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): காங்கிரஸ், தன் தொடக்கம் முதலே அனைத்து மதங்களையும் சமமாக மதித்து, இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக கொள்கையில் உறுதியாக இருக்கிறது. நம் நாட்டில் சமாதானமும், ஒற்றுமையும், சகோதரத்துவமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும் அனைத்து சமுதாயத்தினரும் கைகோர்த்து, இந்தியாவை மேலும் வலிமையாகவும் சமத்துவமாகவும் கட்டி எழுப்புவோம்.

வைகோ (மதிமுக): இருளை கிழித்து ஒளி எழுதல் போல, ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, சிலுவையில் அறையப்பட்டு, ரத்தம் சிந்திய கிறிஸ்து இயேசுநாதர், மனிதகுலத்தின் அவலத்தை போக்க 3ம் நாள் உயிர்த்தெழுந்த உன்னதத்தை, ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ பெருமக்கள் கொண்டாடுகின்றனர். மரண பயங்கரத்துக்கு ஆளாகி, துயர இருளிலும், கண்ணீரிலும், துடிதுடித்து வாடும் ஈழத்தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்கும்; விடியல் உதிக்கும். அதற்காக இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும்.

அன்புமணி (பாமக): அன்பு, கருணை, மன்னிப்பு உள்ளிட்ட நற்குணங்களை போதித்தவரான இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட 3வது நாளில் உயிர்த்தெழுந்த இந்த திருநாளில் அனைவருக்கும் வாழ்த்துகள். உலகின் இன்றைய தேவை கருணை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் குணம், அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுதல் ஆகியவை தான். அதை வலியுறுத்தும் திருநாள் தான் ஈஸ்டர் திருநாள் ஆகும்.

Tags : Easter ,Chennai ,CONGRESS ,SECULARIST DEMOCRATIC POLICY OF INDIA ,
× RELATED புதுச்சத்திரம் ஊராட்சியில் கிராம சேவை மையத்தில் மது அருந்தி கும்மாளம்