முகநூலில் பழகி 20 பெண்களை காதலில் வீழ்த்தி பணம் பறித்த வாலிபர் அதிரடி கைது புதுவை பெண்ணிடம் பணம் கேட்டபோது பிடிபட்டார்

புதுச்சேரி, பிப். 19: முழுநூலில் பழகி 20 பெண்களை காதலில் வீழ்த்தி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை அருகே உள்ள கூவத்தூர் வேட்டைகாரன்குப்பத்தை சேர்ந்தவர் முருகையன் மகன் கார்த்திக் (25). 12ம் வகுப்பு வரை படித்த இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சமையல் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர், புதுச்சேரி திருபுவனை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் முகநூல் மூலம் நட்பாக பழகி வந்துள்ளார். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் திடீரென ஒருநாள் கார்த்திக் தனது காதலியிடம், உனது அழகை பார்க்க விரும்புகிறேன். குளிக்கும்போது வீடியோ எடுத்து எனக்கு அனுப்பு என கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் குளிப்பதை வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார். இதை பார்த்த கார்த்திக், இளம்பெண்ணை வர்ணித்ததோடு, தான் விழுப்புரத்திற்கு வருவதாகவும், தனது படிப்பு செலவுக்காக ரூ.5 ஆயிரம் கொடுத்து உதவுமாறும் கேட்டுள்ளார். உடனே துளசி விழுப்புரத்திற்கு சென்று ரூ.5 ஆயிரத்தை கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சிறிது நாட்கள் கழித்து மேலும் ரூ.5 ஆயிரம் கேட்டுள்ளார். அதையும் அந்த பெண் ஏற்பாடு செய்து தந்துள்ளார். பின்னர் ரூ.10 ஆயிரம் வேண்டும் என கார்த்திக் கேட்டுள்ளார். அப்போது தன்னிடம் பணம் இல்லை என இளம்பெண் கூறவே, பணம் தரவில்லையென்றால் உன்னுடைய நிர்வாண வீடியோவை நண்பர்களிடம் காண்பிப்பேன். முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் பதிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன இளம்பெண் தனது போனில் உள்ள வீடியோவை அழித்துவிட்டு, இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதையறிந்த கார்த்திக் பெண்ணின் அப்பாவிடம் ரூ.50 ஆயிரம் வேண்டும் என மிரட்டியுள்ளார். இதையடுத்து அவர் புதுச்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். புகாரை விசாரித்த மகளிர் போலீசார் திருபுவனை காவல் நிலையத்திற்கு பரிந்துரைத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன், எஸ்ஐ அஜய்குமார், குற்றப்பிரிவு போலீசார் வீரபாலு, பார்த்தசாரதி ஆகியோர் தனிப்படை அமைத்து கார்த்திக்கை தேடி வந்தனர். கார்த்திக்கின் செல்போன் எண்ணை வைத்து, அவர் கூவத்தூரில் இருப்பதை அறிந்து அங்கு சென்று அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கார்த்திக் இதுபோல் சுமார் 20 பெண்களிடம் முகநூல் மூலம் பழகி ஆயிரக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது.

Related Stories: