அங்கன்வாடி ஊழியர் கொலை வழக்கில் தந்தை, மகன்களுக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

விழுப்புரம், பிப். 19:  சங்கராபுரம் அருகே அங்கன்வாடி பெண் ஊழியர் கொலை வழக்கில் தந்தை, மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கொசப்பாடியைச் சேர்ந்தவர் சின்னையன் மனைவி தனபாக்கியம் (58). இவர் மூரார்பாளையம் அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இதனிடையே அதே ஊரை சேர்ந்த அர்ச்சுனன் குடும்பத்துக்கும், இவர்களுக்கும் நிலப்பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக தனபாக்கியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்திருந்தது. இதனால் தனபாக்கியம் குடும்பத்தினர் மீது மேலும் அர்ச்சுனன் குடும்பத்திற்கு பகை அதிகரித்தது. இதனால், தனபாக்கியத்தை கொல்ல திட்டம் செய்துள்ளனர்.

 

 இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி தனபாக்கியம் பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அர்ச்சுனன், அவரது மகன்கள் முத்துகிருஷ்ணன், லட்சுமிகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து தனபாக்கியத்தை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக, சங்கராபுரம் காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி சாந்தி தீர்ப்பு கூறினார்.  அதில் அர்ச்சுணன்(65), முத்துக்கிருஷ்ணன் (38), லட்சுமிகுமார்(35) ஆகியோருக்கு,ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும், அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட, மூன்று பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில் ஆஜரானார்.

Related Stories: