×

சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிமுக, பாஜ அட்டூழியம்: வழிவிட சொன்னவர்கள் மீது தாக்குதல்

 

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் தொகுதியில் நேற்று மாலை கொட்டிவாக்கம், அம்பேத்கர் பிராதன சாலை, கங்கையம்மன் கோயிலில் பூஜையுடன் தனது முதல் நாள் தேர்தல் பிரசாரத்தை அதிமுக வேட்பாளர் துவக்கினார். அவரது தேர்தல் பிரசாரத்தில் அதிமுக, பாஜ உள்பட பல்வேறு கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர். அப்பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால், சாலையை மறித்தபடி அவர்கள் நின்றிருந்தனர்.

அப்போது அவ்வழியே பைக்கில் வந்த 2 பேர், தாங்கள் செல்வதற்கு வழி விடும்படி சாலையை மறித்தபடி நின்ற அதிமுக மற்றும் பாஜவினரிடம் சத்தமாக தெரிவித்தனர். அந்த 2 பேரும் தொடர்ச்சியாக வழிவிடும்படி கேட்டதால், ஆத்திரமடைந்த பாஜவினரும் அதிமுகவினரும் எங்களிடமா வழி விடச் சொல்கிறாய் எனக் கேட்டு பைக்கில் வந்த 2 பேரிடமும் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தியும் அதிமுக மற்றும் பாஜவினர் தாக்குதல் நடத்தியதில், பைக்கில் வந்த ஒருவரின் தலையில் படுகாயம் ஏற்பட்டது.

மேலும், அதே சாலையில் நேற்று மதியம் மூர்த்தி (40) என்பவர் மாரடைப்பால் இறந்துள்ளார். அவரது உடலுக்கு இறுதி அஞ்சலிகூட செலுத்த விடாமல், அவரது உடலை வீட்டிலேயே வைத்திருக்குமாறும், அதிமுக தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு உடலை வீட்டிலிருந்து வெளியே எடுத்து வரவேண்டும் என்று அதிமுகவினரும் பாஜவினரும் மிரட்டும் தொனியில் அடாவடி செயல்களில் ஈடுபட்டனர். பின்னர் இறந்தவரின் வீட்டை அதிமுக வேட்பாளர் கடந்து சென்ற பிறகே, மாலை 6 மணியளவில்தான், சுமார் 6 மணி நேர காத்திருப்புக்குப் பின் இறந்த மூர்த்தியின் உடலுக்கு இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் செய்யும் நிலை ஏற்பட்டது.

இப்பகுதி சாலையின் இருபுறமும் வீடுகள் அமைந்த குறுகிய சாலையில், சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு அதிமுகவினரும் பாஜவினரும் பட்டாசுகள் வெடித்து அராஜகத்தில் ஈடுபட்டனர். மேலும், இறந்த மூர்த்தியின் வீடு அருகிலும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். இவர்களின் முதல் நாள் தேர்தல் பிரசாரத்தினால், அவ்வழியே வந்த வாகன ஓட்டிகளில் பலரும் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. முதல் நாள் பிரசாரத்துக்கே இந்த நிலை என்றால், இவர்கள் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால், இத்தொகுதியின் என்னாகும் என்று அப்பகுதி மக்கள் புலம்பத் துவங்கினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags : Adimuka ,Baja Atuziyam ,Chozhinganallur ,Dharippakkam ,Supreme Candidate ,Pooja ,Gangayamman Temple ,Kotiwakkam ,Ambedkar Prathana Road ,Baja ,
× RELATED ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆட்சியைக்...