திருக்கோவிலூர்: திமுகவினரிடம் பேசினால் கையை வெட்டுவேன் என அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடிவேல் நகரில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பழனிச்சாமியின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான முன்னாள் எம்எல்ஏ குமரகுரு பேசினார்.
அப்போது, அதிமுக நிர்வாகிகள் அல்லது தொண்டர்கள் யாராவது திமுகவினருடன் ரகசியமாக பேசுவது எனக்குத் தெரிந்தால், நானே நேரடியாக அந்த ஏரியாவுக்கு வருவேன், அப்படி அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்களின் “கையை உடைப்பேன், கையை வெட்டுவேன்” என்று மிரட்டல் தொனியில் பேசினார். குமரகுருவின் இந்த மிரட்டல் பேச்சை கேட்டதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இதைப்பார்த்த நெட்டிசன்கள் “என்னப்பா.. இந்த மனுஷன் சினிமா படத்தில் வருவதுபோல பெரிய ரவுடியா ஃபார்ம் ஆயிட்டாரோ?” சினிமா வில்லன்களை எல்லாம் மிஞ்சி விட்டாரே… என கலாய்த்து வருகின்றனர். சினிமா படத்தில் வடிவேலு அட்ரஸ் கேட்டு மிரட்டுவதுபோல, குமரகுருவும் “ஏரியாவுக்கே வருவேன்” என எகிறியது சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாகவும் தெறிக்கின்றன.
தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகளை மீறி வன்முறையைத் தூண்டும் வகையில் வேட்பாளரே பேசியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே சீட் வழங்கியதாக குமரகுரு மீது அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
