மகனை சுட்டு கொன்ற மாஜி ராணுவ வீரர் கைது வேலூரில் பொதுமக்கள் அதிர்ச்சி

வேலூர், பிப்.18: வேலூரில் போதையில் ஏற்பட்ட தகராறில், தந்தை தற்கொலை செய்து ெகாள்வதாக நினைத்து காப்பாற்ற முயன்ற மகனை முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.வேலூர் அடுத்த அடுக்கம்பாறை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(50). முன்னாள் ராணுவ வீரர். தற்போது சென்னை எம்எல்ஏ விடுதியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் பெங்களூருவில் ஐடி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். மற்றொரு மகன் வினோத்(25), 10ம் வகுப்பு படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்து விட்டு ஊர் சுற்றி வந்துள்ளார்.

இவர்களது மகள் திருமணமாகி கீழ்அரசம்பட்டில் வசித்து வருகிறார். இவர் தனது 2வது பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்து சமீபத்தில் குழந்தை பிறந்து தாய் வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் தினமும் தந்தை சுப்பிரமணியும், மகன் வினோத்தும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவார்களாம். அப்போது சுப்பிரமணி, தனது மகன் வினோத்தை பார்த்து, ‘குடித்து விட்டு வேலை வெட்டிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருகிறாய்’ என்று கேட்டு தகராறு செய்வதுடன் அடிக்கடி, ‘உன்னை சுட்டுக் கொன்று விடுவேன்’ என்றும் மிரட்டல் விடுப்பாராம்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த சுப்பிரமணிக்கும், அவரது மகன் வினோத்துக்கும் நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு நடந்துள்ளது. அப்போது தந்தையும், மகனும் முழுபோதையில் இருந்துள்ளனர். இந்த தகராறை மகள் தட்டி கேட்டதாக தெரிகிறது. அப்போது சுப்பிரமணி மகளை திட்டியதுடன், தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை எடுத்து மகள் மீது வீசியுள்ளார்.

இதனால் வினோத், ‘ஏன் மகளை இப்படி திட்டுகிறீர்கள்?’ என்று தட்டிக்கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி மகனையும், மகளையும், மனைவியையும் வீட்டில் இருந்து வெளியில் தள்ளி கதவை உள்பக்கமாக தாழ் போட்டுக்கொண்டுள்ளார். தனது தந்தை தற்கொலை போன்ற ஏதாவது விபரீத முடிவை எடுத்து விடுவாரோ? என அச்சமடைந்த மகன் வினோத், தந்தையின் பெயரை சொல்லி கதவை தட்டி அழைத்துள்ளார். அப்போது திடீரென கதவை திறந்த சுப்பிரமணி தான் வைத்திருந்த துப்பாக்கியால் வினோத்தை சுட்டார். இதில் குண்டு பாய்ந்து வினோத் சம்பவ இடத்திலேயே பலியானார்.

வினோத்தை சுட்டுக் கொன்றதை பார்த்த சுப்பிரமணியின் மனைவியும், மகளும், வினோத்தின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு திரண்ட மக்களை பார்த்த சுப்பிரமணி, அங்கிருந்து தப்பியோடினார். தகவலறிந்து விரைந்து வந்த வேலூர் தாலுகா போலீசார் வினோத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து அடுக்கம்பாறையிலேயே போதையில் சுற்றி கொண்டிருந்த சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையே மகனை சுட்டுக்கொன்ற சம்பவம் வேலூர் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

.

முன்னாள் படை வீரர்களுக்கு லைசென்ஸ்

இந்திய ராணுவம் மற்றும் பிஎஸ்எப் உட்பட துணை ராணுவ படைகளில் பணியாற்றும் வீரர்கள் குறுகிய காலத்திலேயே ஓய்வு பெறுவதால், அவர்களுக்கு காவல்துறை அரசு பணிகளிலும், வங்கிகள் உட்பட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. குறைந்த கல்வித்தகுதி கொண்டவர்களுக்கு காவல்துறையிலோ அல்லது வங்கிகள் உட்பட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், தனியார் நிறுவனங்களில் செக்யூரிட்டி பணி வழங்கப்படுகிறது. இதற்காக ஓய்வு பெறும்போதே இரட்டை குழல் துப்பாக்கி பயன்படுத்தும் உரிமம் மட்டுமின்றி, துப்பாக்கியையும் வாங்கி வைத்திருப்பது வழக்கம்.

வேலூர் அடுக்கம்பாறையில் மகனை சுட்டுக்ெகான்ற சுப்பிரமணியின் வீட்டு எதிரே நேற்று காலை போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories: