வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக அரியர் தேர்வுகள் தொடக்கம் ஒரே நாளில் 5 தேர்வுகள் எழுதும் கட்டாயம் 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு

வேலூர், பிப்.18: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக அரியர் தேர்வுகள் நேற்று தொடங்கிய நிலையில், ஒரே நாளில் 5 தேர்வுகளை எதிர்கொள்ளும் குழப்ப நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக மாணவ, மாணவிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 134 அரசு, நிதியுதவி, சுயநிதி, பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் என உள்ளன. இக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஏறத்தாழ 80 ஆயிரம் அரியர் மாணவ, மாணவிகளுக்கான தேர்வு நேற்று தொடங்கியது. இத்தேர்வை வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் எழுதுகின்றனர்.

இதற்காக வெளியிடப்பட்ட தேர்வு அட்டவணை மாணவ, மாணவிகள், கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இளநிலை பட்டப்படிப்பில் முதல் செமஸ்டரில் உள்ள அனைத்து பாடங்களுக்கான தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும். இன்று 2ம் செமஸ்டரில் உள்ள அனைத்து பாடங்களுக்கான அரியர் தேர்வை எழுத வேண்டும். நாளை (19ம்தேதி) 3ம் செமஸ்டர் தேர்வும், 20ம் தேதி 4ம் செமஸ்டர் தேர்வும், 21ம்தேதி 5ம் செமஸ்டர் தேர்வும் எழுத வேண்டும்.

அதேபோல் முதுநிலை படிப்பில் நேற்று செமஸ்டர் தேர்வை மாணவ, மாணவிகள் எதிர்கொண்டனர். இன்று இரண்டாம் செமஸ்டர் தேர்வையும், நாளை 19ம் தேதி 3ம் செமஸ்டர் தேர்வையும் எழுத வேண்டும். இத்தேர்வுகளை மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் கேள்விகளை பெற்று, தேர்வு எழுதிய பின்னர் விடைத்தாள்களை அந்தந்த கல்லூரிகளில் ஒப்படைக்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் முதல் செமஸ்டரிலேயே ஒரு பாடத்துக்கும் மேல் அரியர் வைத்துள்ள மாணவ, மாணவிகள் ஒரே நாளில் அனைத்து பாடங்களுக்கான தேர்வு எழுதுவது என்பது எந்த அடிப்படையில் சரியாகும் என்பது மாணவ, மாணவிகள் மட்டுமின்றி கல்லூரி ஆசிரியர்களின் கேள்வியாகவும் உள்ளது.

இதுபோல் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை மாணவ, மாணவிகளுக்கு தருவதையும் பல்கலைக்கழக நிர்வாகம் வழக்கமாக வைத்துள்ளது. இனிமேலாவது பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி, புதிய படிப்புகளை கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளில் பல்கலைக்கழகம் கவனம் செலுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: