×

குடிபோதையில் கட்சிக்காரர்களே ஒருவரை ஒருவர் பாட்டிலை வீசி சண்டை; கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களும் தவெகவினர் என விசாரணையில் அம்பலம்: மைக்கில் வீர வசனம் பேசியதாக ஆதவ் அர்ஜூனாவை நெட்டிசன்கள் கலாய்

சென்னை: தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சி வாலிபர்கள் 2 பேர் ஒருவரை ஒருவர் மதுபாட்டிலால் தாக்கி கொண்டது போலீஸ் நடத்திய விசாரணையில் அம்பலாமாகியுள்ளது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ஆதவ் அர்ஜூனாவை ‘மைக்கில் வீர வசனம் பேசியதாக’ நெட்டிசன்கள் கலாயித்து வருகின்றனர். சென்னை அயனாவரம் தொகுதிக்குட்பட்ட ஜாயிண்ட் ஆபீஸ் சாலையில் தவெக கட்சியின் வேட்பாளரான அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிமுகம் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திடீரென சிறிய பாட்டில் துண்டு ஒன்று வந்து விழுந்தது.

இதில் கூட்டத்தில் கலந்து கொண்ட கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெரு பகுதியைச் சேர்ந்த கலைவாணி(45) மீது விழுந்தது. இதில் லேசான காயம் ஏற்பட்டு கலைவாணி பெரியார் நகர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். கூட்டத்தில் பாட்டில் துண்டு வந்து பட்டதும் அப்போது மேடையில் அமர்ந்திருந்த தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா உணர்ச்சி வசப்பட்டு நாஞ்சில் சம்பத் பேசி கொண்டிருந்த போது, திடீரென மைக்கை பிடித்து இங்கு பாட்டில் வந்து விழுந்ததற்கு தமிழக முதல்வர் தான் காரணம் எங்களை அவர் அச்சுறுத்துகிறார் என சினிமா காட்சிகளை போல் வீரவசனம் பேசினார்.

கூட்டத்தில் பாட்டில் வீசப்பட்ட சில நிமிடங்களிலேயே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அயனாவரம் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார், பாட்டில் எங்கிருந்து வந்தது என்று விசாரணை நடத்தி அதிரடியாக பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த தனியாருக்கு சொந்தமான லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது லாட்ஜில் 2 வாலிபர்கள் மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டிருந்ததை பார்த்த போலீசார், 2 பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, அயனாவரம் பொன்வேல்புரம் பகுதியைச் சேர்ந்த அப்புகுட்டி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரித்திக்(19) என தெரியவந்தது. இதில் அப்புகுட்டி மின்சாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருவதும், ரித்திக் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வருவதும், இருவரும் தவெக உறுப்பினர்கள் எனவும் தெரியவந்தது. தவெக பொதுக்கூட்டம் என்பதால் அதை லாட்ஜில் இருந்து பார்க்கும் வகையில் இருவரும் திட்டமிட்டு தங்கி இருந்ததும் தெரியவந்தது.

மதுக்கடைகள் நேற்று விடுமுறை என்பதால் அப்புக்குட்டி முன்கூட்டியே மதுபானத்தை வாங்கி வைத்துக்கொண்டு அவருக்கு நன்கு அறிமுகமான ரித்திக் என்பவரை மது குடிக்க அழைத்துள்ளார். இருவரும் அதே பகுதியில் லாட்ஜில் ரூம் எடுத்து மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதில் அப்புகுட்டி அருகில் இருந்த குவாட்டர் சரக்கு பாட்டிலை தூக்கி ரித்திக் மீது வீசி உள்ளார். ரித்திக் தன் மீது பட்டுவிடக்கூடாது என்பதற்காக நகர்ந்து உள்ளார் அந்த பாட்டில் உடைந்து ஒரு சிறு துண்டு பொதுக்கூட்டத்தில் விழுந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து நேற்று இரவு அயனாவரம் போலீசார் அப்புகுட்டி மற்றும் ரித்திக் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். பிறகு 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இரவோடு இரவாக நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே தவெக கூட்டத்தில் பாட்டில் வீசியது தொடர்பாக வில்லிவாக்கம் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா ‘சினிமா காட்சிகள் போல் வீர வசனம் பேசிய’ வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. அதே நேரம் பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்ததும் சமூக வலைத்தளங்களில் பரவியது.

அதேநேரம் ஆதவ் அர்ஜூனா பாட்டில் வீசிய சில நிமிடங்களில் பாட்டில் வீசிய நபர்கள் போதையில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் கூட்டத்தில் காட்டி பேசினார். இதனால் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் பலர், ‘ஆதவ் அர்ஜூனாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இதனால் அவர் முதல்வர் குறித்து தவறாக பேசி பொதுமக்களிடையே உண்மைக்கு புறம்பாக பொய்யை உணர்ச்சி வசப்பட்டு பேசுவது போல் முழக்கம் இடுகிறார் என்று கேலி கிண்டல் செய்து பதிவு செய்து வருகின்றனர். பாட்டில் வீசிய தவெகவினரை போலீசார் கைது செய்த பிறகும், இதில் முதல்வரின் சதி இருப்பதாக பொய் பிரசாரம் செய்து வருவதாக ஆதவ் அர்ஜூனா வை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Tags : Dukhavi ,Adav Arjuna ,Chennai ,
× RELATED பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியாவதில்...