ராஜ்நிவாஸில் நம்பிக்கையில்லா தீர்மான மனு வழங்கல் சட்டசபையை கூட்டி முதல்வர் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் ரங்கசாமி பரபரப்பு பேட்டி

புதுச்சேரி,  பிப். 18: புதுச்சேரியில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகிய நிலையில்  கவர்னர் செயலரிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் கோரும் மனுவை ரங்கசாமி  தலைமையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வழங்கினர். பின்னர் ராஜ்நிவாஸில்  இருந்து வெளியே வந்த ரங்கசாமி, சட்டசபையை கூட்டி முதல்வர் மெஜாாிட்டியை  உடனே நிரூபிக்க வேண்டுமென அதிரடியாக தெரிவித்தார். புதுச்சேரி ஆளும்  காங்கிரஸ் அரசு மெஜாரிட்டி இழந்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் தார்மீக  பொறுப்பேற்று முதல்வர் நாராயணசாமி பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள்  வலியுறுத்தின. ஆனால் அவர்களின் கோரிக்கை நியாயமானதல்ல, எங்களுக்கு  பெரும்பான்மை இருக்கிறது. அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நாங்கள்  செயல்படுவோம் என தெரிவித்திருந்தார். எதிர்க்கட்சிகள் முதலில் தங்களது  பலத்தை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்த முதல்வர் நாராயணசாமி பதவி  விலக மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர்  ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் டிபிஆர் செல்வம்,  ஜெயபால், சந்திர பிரியங்கா, திருமுருகன், கோபிகா, சுகுமாறன், அதிமுக  எம்எல்ஏக்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரிமணிகண்டன், அசானா, பாஜகவில்  சாமிநாதன், செல்வகணபதி, தங்க விக்ரமன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேற்று  மதியம் கவர்னர் மாளிகை சென்றனர். அங்கிருந்த கவர்னரின் செயலர்  சுந்தரேசன், சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் ஆகியோரிடம் நம்பிக்கை இல்லா  தீர்மானம் கோரும் மனுவை வழங்கினர். எதிர்க்கட்சிகளின் 14 எம்எல்ஏக்கள்  கையெழுத்திட்ட மனுவை அவர்கள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து வெளியே வந்த  எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி கூறுகையில், ஆளும் அரசு மெஜாரிட்டியை  இழந்திருக்கிறது.

எனவே முதல்வர் நாராயணசாமி உடனே சட்டமன்றத்தை கூட்டி உடனே  மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்றார். அதைத் தொடர்ந்து பாஜவைச் சேர்ந்த நமச்சிவாயம், அதிமுக எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் கூறுகையில்,  சட்டசபையில் தற்போது மொத்த எம்எல்ஏக்கள் 28 பேர் உள்ளனர். இதில் 14 பேர்  ஆளும் காங்கிரசில் சபாநாயகரோடு சேர்ந்து உள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியில்  நாங்கள் சபாநாயகரை தவிர்த்து 14 பேர் இருக்கிறோம்.

எனவே அவர்கள்  மெஜாரிட்டியை இழந்திருக்கிறார்கள். எனவே நாராயணசாமி தார்மீக பொறுப்பேற்று  பதவி விலக சொன்னோம். ஆனால் சிறுபிள்ளைத்தனமாக தங்களுக்கு மெஜாரிட்டி  இருப்பதாக முதல்வர் நாராயணசாமி கூறுகிறார். தற்போது 14  எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மான மனுவை  கவர்னரிடம் செயலரிடம் கொடுத்துள்ளோம். ஒன்றிரண்டு தினங்களில் சட்டசபையை  கூட்டி பெரும்பான்மையை முதல்வர் நாராயணசாமி நிரூபிக்க வேண்டும் என்றார்.

மத்திய பாஜக, புதுச்சேரியில் ஆளும் எம்எல்ஏக்களை மிரட்டுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது தொடர்பாக கேட்டதற்கு, யாரும் அவர்களை  மிரட்டவில்லை. கடந்த காலங்களில் இருந்தே அவர்கள் தங்களது அதிருப்திகளை  பல்வேறு கட்டங்களில் தெரிவித்து வந்தனர். இதற்கான வீடியோக்கள்  எல்லோரிடமும் உள்ளது. எனவே இது உண்மையல்ல என்றனர்.  இன்னும் சில எம்எல்ஏக்கள் அங்கு அதிருப்தியில்தான் இருக்கிறார்கள்.  அவர்களும் ஒவ்வொன்றாக வெளியே வருவார்கள். எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை  விலைக்கு வாங்கலாம் என்ற முதல்வர் நாராயணசாமியின் கனவு பலிக்காது என்று  இருவரும் தெரிவித்தனர். அப்போது எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: