×

தவெக தலைவர் விஜய் மீது சென்னை பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: தவெக தலைவர் விஜய் மீது சென்னை பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் ஜோசப் விஜய் நேற்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் கலை கல்லூரியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் முடிந்து 12.25க்கு வெளியே வந்தார். வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு நேராக கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலைக்கு சென்று பிரசாரம் நடைபெறும் என கூறியிருந்தனர். ஆனால், வேட்பு மனுவை தாக்கல் செய்து வெளியே வந்தவுடன் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பிரசார வாகனத்தில் ஏறிய விஜய் அங்கிருந்து ஊர்வலமாக கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலைக்கு சென்றார். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அம்பேத்கர் கல்லூரி சாலை முதல் எம்கேபி நகர் கொடுங்கையூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் ஆம்புலன்சும் சிக்கியது. கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலையில் மதியம் இரண்டு மணி முதல் நான்கு மணி வரை தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், முன்கூட்டியே 1.05 மணியளவில் விஜய் தனது பிரசாரத்தை தொடங்கினார். 1.05 மணியளவில் பேச ஆரம்பித்த விஜய் 1.20 தனது பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து கொளத்தூருக்கு கிளம்பினார். விஜய் பெரம்பூரில் இருந்து கிளம்பிவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கொளத்தூரில் குவிய தொடங்கினர்.

ஆனால் 1.20 மணியளவில் பெரம்பூரில் இருந்து கிளம்பிய விஜய் மாலை 3.40 மணியளவில் கொளத்தூர் அகரம் சந்திப்பிற்கு சென்றார். பெரம்பூரில் இருந்து கொளத்தூருக்கு ஊர்வலமாக தனது பிரசார வாகனத்தில் ரோடு ஷோ நடத்திக் கொண்டே சென்றார். கொளத்தூரில் மாலை 3.40 மணியளைவில் பேச்சை தொடங்கிய விஜய், ‘அனைவருக்கும் வணக்கம், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பிரபு அவர்களுக்கு வாக்களியுங்கள்’. பிரபு அவர்கள் வேறு நான் வேறு இல்லை நம்பிக்கையுடன் இருங்கள் நல்லதே நடக்கும் நன்றி என பேசி முடித்தார். வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசினார். அதுவும் கொளத்தூர் வேட்பாளர் வி.எஸ்.பாபு பெயருக்கு பதிலாக பிரபு என்று தவறுதலாக மாற்றி கூறிவிட்டு அங்கிருந்து வில்லிவாக்கம் சென்றார்.

ஆனால் வில்லிவாக்கத்திற்கு செல்லாமல் பாதியிலேயே பிரசாரத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பி விட்டார். கொளத்தூரில் பிரசாரம் செய்ய மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், விஜய் 3.40 மணிக்கு வந்து 3.45 மணிக்கு தனது பிரசாரத்தை முடித்தார். போலீசார் குறித்து கொடுத்த குறிப்பிட்ட அந்த இடத்தில் பிரசார வாகனத்தை நிறுத்தாமல் சாலையில் நடுவே பிரசார வாகனத்தை நிறுத்தி ஐந்து நிமிடங்கள் பேசியதால் அந்த இடம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை கொளத்தூரில் நேற்றைய பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், 5 ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி அளித்த நிலையில் 30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி விதிமீறலில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் சிறப்பு கண்காணிப்பு பிரிவில் உள்ள அதிகாரி குமார் என்பவர் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வீடியோ பதிவு ஆதாரங்கள் உடன் அதிகாரி குமார் புகார் அளித்துள்ளார். விஜய் கிளம்பியதால் அவரை பார்க்க முண்டியடித்த பொதுமக்கள் பலரும் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இதில், பலர் மயக்கம் அடைந்தனர்.

சூளை பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமி (18) என்ற பெண் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோன்று சுமார் ஒரு சிறுமி உள்பட 10 பெண்கள் மயக்கம் அடைந்தனர். உடனடியாக போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் அவர்களை தண்ணீர் கொடுத்து ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது. இதை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரையும் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

Tags : Chennai Peravallur ,Dweka ,Vijay ,Chennai ,Peravallur ,Tamil Nadu Victory Club Party ,Josef Vijay ,Ambedkar Art College ,Perampur Assembly Constituency ,
× RELATED 234 தொகுதியிலும் வேட்புமனு தாக்கல்...