×

வாக்குப்பதிவின் போது இடையூறு ஏற்பட்டால் மண்டல அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்

*மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரை

குன்னூர் : வாக்குப்பதிவின்போது இடையூறு ஏற்பட்டால் மண்டல அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும் மாவட்ட தேர்தல் அலுவலர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து குன்னூர் தனியார் பள்ளியில் முதற்கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.

இந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு கூறியதாவது, ‘‘தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதை அடுத்து, உதகை ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளியிலும், குன்னூர் ஜோசப் மேல்நிலைப்பள்ளியிலும், கூடலூர் மார்னிங் ஸ்டார் மேல்நிலைப்பள்ளியிலும், வாக்குப்பதிவு நாளன்று 736 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள 3,532 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி வகுப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை விளக்கம், வாக்குச்சாவடி அலுவலர்களின் பொறுப்புகள், டெண்டர் வாக்கு ஆகியவற்றை குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

வாக்குப்பதிவு முந்தைய நாள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குப்பதிவு முடிந்த பின் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மாதிரி வாக்குப்பதிவுகள் முடிந்த பின் பின்பற்ற வேண்டிய பணிகள் குறித்து நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

இப்பயிற்சியில் ஏதேனும் சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில் அதனை கேட்டு தெரிந்து கொள்வதோடு மட்டுமின்றி, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வழிமுறைகள் அனைத்தையும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களும் பின்பற்ற வேண்டும்.

மேலும், வாக்குப்பதிவு நாளன்று எவ்வித பதற்றமில்லாமல் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் எனவும், வாக்குப்பதிவு நாளன்று ஏதேனும் இடையூறுகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக மண்டல அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்வில், தேர்தல் நடத்தும் அலுவலர்களான குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, ஊட்டி கோட்டாட்சியர் டினு அரவிந்த், கூடலூர் கோட்டாட்சியர் குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லோகநாயகி உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : ADVICE KUNNUR ,Tamil Nadu Assembly ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்