பெவர்லி ஹில்ஸ்: உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை வலேரி பெரின் உடல்நலக் குறைவால் காலமானார்.ஹாலிவுட் நடிகை வலேரி பெரின் கடந்த 2011ம் ஆண்டு முதல் நடுக்கம் மற்றும் உடல்நலப் பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து 2015ம் ஆண்டு அவருக்கு பார்க்கின்சன் நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நோயுடன் அவர் போராடி வந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸில் உள்ள தனது இல்லத்தில் நேற்று வலேரி பெரின் (82) காலமானார். இவரது மறைவை அவரது நெருங்கிய நண்பரும் பராமரிப்பாளருமான ஸ்டேசி சதர் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஸ்டேசி சதர் கூறுகையில், ‘வலேரி பெரின் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகவே உடல்நலப் பிரச்னைகளுடன் போராடி வந்தார். அவரது மருத்துவ சிகிச்சைக்கு பெரும் செலவு ஏற்பட்ட நிலையில், அவரது இறுதி ஆசையான பாரஸ்ட் லான் மெமோரியல் பூங்காவில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நிதி திரட்டல் மூலம் செய்யப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.
முன்னதாக இவரது நோய் பாதிப்பு குறித்த ‘வலேரி’ என்ற ஆவணப்படம் கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. வலேரி பெரினின் மறைவு உலக சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 1974ம் ஆண்டு வெளியான ‘லென்னி’ படத்தில் ஹனி புரூஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அந்தப் படத்திற்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகை விருதையும், பாஃப்டா விருதையும் வென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
