*2 டன் பழைய துணிகள் அகற்றம்
விகேபுரம் : உலக தண்ணீர் தினத்தையொட்டி பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நடந்த தூய்மைப் பணியில் சுமார் 2 டன் பழைய துணிகள் அகற்றப்பட்டன.நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் உலக தண்ணீர் தினத்தையொட்டி அய்யா கோயிலின் தெற்கே சித்தர்கள் சங்கம தீர்த்த படித்துறை பகுதிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
பொதுவாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்தும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாபநாசம் பாபநாசர் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துசெல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கோயில் தரிசனத்திற்கும், சுற்றுலாவுக்கும் அதிக அளவில் மக்கள் வந்துசெல்கின்றனர். மேலும் பரிகாரத்திற்காக வருகைதருவோரில் ஒரு சிலர் பரிகார பூஜைகள் முடிந்த பிறகு இங்குள்ள தாமிரபரணி ஆற்றிலேயே பழைய துணிகளை விட்டு செல்கின்றனர்.
இவ்வாறு ஆற்றில் போடப்பட்ட துணிகளை தண்ணீரில் இருந்து அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பணிகள் உலக தண்ணீர் தினமான நேற்று நடந்தன.
அத்துடன் ஆற்றில் கற்பாறைகளுக்கு இடையில், நீரில் தேங்கிக்கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், நாப்கின், கலயம், பூமாலைகள், பாட்டில்கள், காலணிகள் உள்ளிட்ட ஏராளமானவற்றையும் அகற்றி ஆற்றை தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்தது.
அத்துடன் தாமிரபரணி கரையோரம், பக்தர்கள் பயணிகளால் விழிப்புணர்வின்றி வீசப்பட்டு கிடந்த ஏராளமான உணவுக் கழிவுகளும் சேகரித்து அகற்றப்பட்டு அவ்விடம் தூய்மையாக்கப்பட்டது. இவ்வாறு அகற்றப்பட்ட 2 டன் பழைய துணிகள், கழிவுகள் முறையாக பொட்டலமாக கட்டப்பட்டு நகராட்சி கிடங்கிற்கு கொண்டுசெல்ல ஏதுவாக சாலையோரத்தில் அடுக்கி வைக்கப்பட்டது.
