×

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் துண்டுபிரசுரங்கள் விநியோகம்

*திருநங்கையர்கள் மூலம் கலைநிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு

நெல்லை : தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு 100% வாக்களிப்பை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அத்துடன் திருநங்கையர்கள் மூலம் கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வாக்காளர்களிடையே தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க செல்லும்போது, மின்னணு இயந்திரங்கள் மூலம் எளிதாக வாக்களிப்பது எப்படி என்பது குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்வது எப்படி, புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பது, முகவரி மாற்றம் உள்ளிட்ட வாக்களிப்பது குறித்து பல்வேறு செயல்முறை விளக்கங்கள், தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி, கோலப்போட்டி, மெஹந்தி போட்டி, கல்லூரி மாணவ மாணவிகளின் சிலம்பக்கலை விழிப்புணர்வு 100% வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. ராதாபுரம் சட்டமன்ற தொகுதி காவல்கிணறு பகுதியில் 100% வாக்களிப்பதன் குறித்து திருநங்கையர்கள் மூலம் வீதி நடன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வீடு வீடாக சென்று வாக்களிப்பதின் பெருமை குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 300 வாக்காளர்கள் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாளை பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்காளர்களிடையே 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், தேர்தல் நாள் ஏப்ரல் 23 என குறிப்பிட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள சிலிண்டர் விற்பனை நிலையத்தில் சிலிண்டர்களில் தேர்தல் நாள் குறித்து ஒட்டுவில்லை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பணிகளில் நெல்லை ஆர்டிஓ பிரியா, தாசில்தார் ராஜேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

வாக்குசாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

இதனிடையே நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முன்னீர்பள்ளம், தருவை, கேடிசிநகர் வாக்குச்சாவடி மையங்களில் ெசய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை தேர்தல் பொது பார்வையாளர் அனுபா வஷ்தவா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags : Nellai district ,Nellai ,Tamil Nadu ,
× RELATED ஈரான், இஸ்ரேல் போரால் உலக பொருளாதாரம்...