சென்னை: சென்னை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்புக்குழு சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்கத்தின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், தமிழக தேர்தல் விதி நடைமுறைகள் அமலாக்கத்தினால், சிறு, குறு வணிகர்கள் முதல் பெருநிறுவனங்கள் வரை ரொக்கபணம் பறிமுதல், பொருட்கள் பறிமுதல் உள்ளிட்டவை நடக்கின்றன.
இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு பேரமைப்பு கோரிக்கை மனு அளித்து, தளர்வுகள் அளித்திட கோரிக்கை அளித்திருந்தது. ஆனாலும் தணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள், தவறான உள்நோக்கத்துடன் பறிமுதல் செய்கின்றனர். இந்நடவடிக்கைகளை எதிர்த்தும், கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்களை உடனடியாக திருப்பித் தருவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளாததை சுட்டிக்காட்டியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மீண்டும் தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அளிப்பதென்றும், 27ம் தேதி தேர்தல் ஆணையமும், அதிகாரிகளும் கோரிக்கைகளை ஏற்காவிடில் மாவட்டங்கள் தோறும், தேர்தல் நடைமுறை விதிகளை எதிர்த்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் வணிகர்களும், வணிகக் குடும்பங்களும் வாக்களிப்பை புறக்கணிப்பது சம்பந்தமான முடிவுகளை நிர்ப்பந்தம் காரணமாக எடுக்கும் சூழ்நிலை உருவாகும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
