சென்னை: தேர்தல் முறைகேடு தடுக்க சென்னையில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை துறை சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்காக மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை மற்றும் மத்திய கலால் வரித்துறை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.சென்னை அண்ணா நகரில் உள்ள சென்னை வெளி ஆணையர் அலுவலகத்தில் ஒரு சிறப்பு மத்திய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறை தினமும் 24 மணி நேரமும் இடைவிடாமல் இயங்கும். தேர்தல் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிப்பது, பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறுவது மற்றும் உடனடியாக நடவடிக்கை எடுப்பது என்பது இந்த அறையின் முக்கிய பணியாகும். இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி — நியூலி டவர்ஸ், தரைத்தளம், 2054-I, II அவென்யூ, 12வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை — 600 040. தொலைபேசி எண் — 044-26142870. மொபைல் மற்றும் வாட்ஸ்அப் எண் — 9498343622.
மின்னஞ்சல் முகவரி — gst.chennaiouter@gov.in அனைத்து ஆணையர் அலுவலகங்களிலும் சிறப்பு நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நேர்மையை காக்கும் வகையில் மூன்று முக்கியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலாவதாக, தேர்தல் பறக்கும்படை குழுக்கள் சாலை சோதனைகள், வாகனத் தணிக்கை மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொது கூட்டங்கள் நடைபெறும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
இரண்டாவதாக, கிடங்குகள் மற்றும் கோடவுன்களில் வாக்காளர்களை கவர்வதற்காக பொருட்கள் பதுக்கி வைக்கப்படுவதை தடுக்க நிலையான கண்காணிப்பு குழுக்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. மூன்றாவதாக, தமிழ்நாட்டிற்கு வெளி மாநிலங்களிலிருந்து பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளூர் சாலைகளில் பறக்கும்படை குழுக்கள் நிறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
எங்காவது சட்டவிரோதமாக பொருட்கள் நகர்த்தப்படுவது அல்லது பதுக்கி வைக்கப்படுவது தெரிந்தால் யாரும் தயங்காமல் மேற்கண்ட தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண் அல்லது மின்னஞ்சல் மூலம் உடனடியாக புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு மண்டலத்தின் தலைமை ஆணையர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
