5 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து மாநிலக்குழுவை கூட்டி முடிவு திமுக கூட்டணியில் தான் தேர்தலை சந்திப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி

சென்னை: 5 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து மாநிலக்குழுவை கூட்டி முடிவு செய்வோம் என்றும், திமுக கூட்டணியில் தான் தேர்தலை சந்திப்போம் என்று முதல்வரை மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கூறினார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து இதுவரை காங்கிரஸ் 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் 5, மதிமுக 4 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையிலான குழு நேரில் சந்தித்து பேசியது. சந்திப்புக்கு பின்னர் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது: மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக பயணித்து வருகிறது.

வரக்கூடிய 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியில் நீடிப்போம் என்று ஏற்கனவே முடிவு எடுத்து நாங்கள் அறிவித்திருக்கிறோம். ஏற்கனவே எங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என்று திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தோம். திமுக சார்பில் பல்வேறு புதிய கட்சிகள் வந்து சேர்ந்து இருக்கக்கூடிய சூழ்நிலையில், அந்த மாதிரி கூடுதல் தொகுதிகள் தருவது சிரமம். நீங்கள் தொகுதிகளை குறைத்து கொள்வதற்கு முன்வர வேண்டும் என்று வற்புறுத்தினர்.

இத்தகைய சூழ்நிலையில் கட்சியின் மாநிலக்குழு 2 முறை கூடி ஏற்கெனவே போட்டியிட்ட 6 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை விட கூடுதலாக தொகுதிகளை வலியுறுத்த வேண்டாம். இந்த கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளன. கூட்டணி வலுவாகியுள்ளது. 2021 தேர்தலில் போட்டியிட்ட 6 என்ற எண்ணிக்கையை பெறுவதற்கு பேச்சுவார்த்தை குழு முயற்சிக்க வேண்டும். கட்சி அந்த முடிவை எடுக்க வேண்டும் என்று எங்கள் மாநிலக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரடியாக சந்தித்து இந்த தொகுதி உடன்பாடு சம்பந்தமாக பேசினோம். முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரு பெரிய அணி, அதிகமான கட்சிகள் இருக்கிறது. ஆகவே தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் உள்ள சிரமங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டார். ஆகவே, இந்த அணியில் மார்க்சிஸ்ட் கட்சி நீடிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதே நேரத்தில் 5 என்கிற எண்ணிக்கை ஏற்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டு இருக்கிறார்.

6 என்ற எண்ணிக்கைக்கு தான் மாநிலக்குழு எங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. எனவே 5 தொகுதிகள் குறித்து மாநிலக்குழு கூடி விவாதித்து பதில் சொல்வதாக முதல்வரிடம் கூறினோம். 5 தொகுதிகள் என்ற எண்ணிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும். சாதகமான பதிலைச் சொல்ல வேண்டும் எனவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். இனி, எங்கள் மாநிலக் குழு கூடி இதுபற்றி விவாதித்து முடிவை அறிவிப்போம்.

காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கியது, மேலும் சில கட்சிகள் வந்துள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை முதல்வரே தெரிவித்தார். நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏதுவும் ரகசியமான உடன்பாடு, ஓப்பந்தங்கள் ஏற்படவில்லை. எல்லாமே வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: