தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதம்: பாஜ நிர்வாகி கைது

 

பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தனியார் திருமண மண்டபத்தில் பாஜ நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த, சேதுபாவாசத்திரம் வேளாண் அலுவலரும், வீடியோ கண்காணிப்பு குழு அலுவலருமான ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் கூட்டத்தை வீடியோ எடுக்க சென்றுள்ளனர். அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தை வீடியோ எடுக்க கூடாது என கூறிய தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜ பொதுச்செயலாளர் வீரா (எ) வீரசிங்கம் தேர்தல் பிரிவு அலுவலர்களை தடுத்து நிறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக வீடியோ கண்காணிப்புக்குழு அலுவலர் ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார், வழக்கு பதிந்து பாஜ பொதுச்செயலாளர் வீரா (எ) வீரசிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பனப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். இதில் காரின் முன்னால் இருந்த கட்சி கொடியை அகற்றுமாறு கூறியுள்ளனர். உரிமையாளரான நெடும்புலி பகுதியை சேர்ந்த மக்கள் தேசம் கட்சி மாநில துணை செயலாளர் விமல்குமார்(42), அதிகாரிகளிடம் ஏன் எனது காரை சோதனை செய்கிறீர்கள்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகள் நெமிலி காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விமல்குமார் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். அவரது காரை கட்சி கொடியுடன் பறிமுதல் செய்தனர்.

 

Related Stories: