மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பெனிக்ஸ். இருவரும் சாத்தான்குளம் பஜார் பகுதியில், செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த அதிமுக ஆட்சிக் காலமான 2020ல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது. குறிப்பிட்ட அனுமதி நேரத்திற்கு மேல் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரை காவல் நிலையத்திற்கு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போலீசார் நடத்திய தாக்குதலில் இருவரும் உயிரிழந்தனர். இவ்வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், அப்போதைய சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐக்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் என 10 பேரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைதான சிறப்பு எஸ்ஐ பால்துரை, உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் முதல் கட்டமாக 2,027 பக்கங்கள், இரண்டாம் கட்டமாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டு இருந்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சம்பவம் நடந்த சமயத்தில் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசார் ரேவதி, பியூலா மற்றும் எஸ்ஐ ரவிச்சந்திரன் ஆகியோர் அளித்த சாட்சியங்கள், மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பரபரப்பான இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததால், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
