தென்காசி: எரிவாயு தட்டுப்பாடு தொடர்வதால் குஜராத்தில் 600 டைல்ஸ் உற்பத்தி நிறுவனங்களில் உற்பத்தி முடங்கியுள்ளது. ஒன்றிய அரசின் பாராமுகத்தால் தற்போது 15 சதவீத அளவிற்கு விலை உயர்ந்துள்ள நிலையில் தொடரும் டைல்ஸ்கள் தட்டுப்பாட்டால் கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வீடுகள் கட்டிவரும் நடுத்தர வர்க்கத்தினர் விலை உயர்வு, தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றனர். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டுத்தாக்குதல் காரணமாக ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டு அப்பகுதி வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே போரில் முறையான ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் அமெரிக்காவின் அனுமதி இன்றி ஈரானின் தெற்கு பார்ஸ் பகுதியில் உள்ள இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனை அமெரிக்க அதிபர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளிப்படுத்தி உள்ளார். ஈரானின் எரிவாயு நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக கத்தார் நாட்டின் ரா லஃபான் இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் உலக நாடுகளுக்கு நடைபெறும் எரிவாயு விநியோகத்தில் 17 சதவீதம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கத்தார் நாடு அறிவித்திருந்தது.
போர் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் பயன்பாடு, தொழில்துறை, போக்குவரத்து ஆகியவற்றிற்கு உயிர்நாடியாக விளங்கும் பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விலை ஏற்றமும் ஏற்பட்டுள்ளது. போர் நீடிக்கும் பட்சத்தில் இவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இப்போரால் பல்வேறு துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கட்டுமான துறையிலும் குறிப்பாக டைல்ஸ் உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் என அனைத்துவிதமான கட்டிடங்களிலும் செராமிக் டைல்ஸ் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. இயற்கை மார்பிள் போன்று பெரிய அளவிலும் செராமிக் டைல்ஸ்கள் புதிதாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டைல்ஸ் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களான களிமண், மணல், ஃபெல்ட்ஸ்பார் போன்ற மூலப்பொருட்களை அரைத்து, கலவை உருவாக்கி பின்னர் தெளிப்பானில் உலர்த்தி பொடியாக்கி, இயந்திரத்தில் அதிக அழுத்தம் கொடுத்து, மெருகூட்டுகின்றனர். இறுதியில் அதிக வெப்பநிலையில் சூளையில் 1100 டிகிரி செல்ஷியஸில் சுட்டு, தரமான டைல்ஸ்களை உருவாக்குகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை தற்போதைய நிலவரப்படி, 75 சதவீத செராமிக் டைல்ஸ் தயாரிப்பு ஆலைகள் குஜராத்தில் இயங்கி வருகிறது. இத்தகைய 700 தொழிற்சாலைகளில் 70 சதவீத ஆலைகள் புரோப்பேன் எரிவாயு மூலமும் மீதமுள்ள ஆலைகள் இயற்கை எரிவாயுவை அடிப்படையாக கொண்டும் செயல்படுகின்றன. அனைத்து முக்கிய டைல்ஸ் பிராண்டுகளுக்கும் குஜராத்தின் மார்பி மாவட்டத்தில் தயாரிப்பு பிரிவுகள் இயங்குகின்றன. இங்கு 600க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் மூலம் ஆண்டிற்கு சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு செராமிக் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலைகளின் ராட்சத உலைகளில் வெப்பமூட்டுவதற்கு, புரோப்பேன் மற்றும் இயற்கை எரிவாயு பயன் படுத்தப்படுகிறது. இவை ஈரான், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ஏற்படுத்தியுள்ள தற்போதைய போக்குவரத்து தடையால் செராமிக் ஆலைகளுக்கு எரிவாயு கிடைக்காமல் முடங்கியுள்ளன. இந்த ஆலைகள் மூலம் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்த நிலையில் தற்போதைய முடக்கத்தின் காரணமாக நேரடியாக சுமார் 50 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளதாக தெரிகிறது. போதுமான வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
செராமிக் ஆலைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்புடைய இணைப்பு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எரிபொருள் கிடைக்காததால் பராமரிப்பு என்ற பெயரில் செராமிக் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தியுள்ளளன. இதனால் கட்டுமான திட்டங்களுக்கு செராமிக் கற்கள் கிடைப்பதில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போர் தொடரும் பட்சத்தில் எரிவாயு விநியோகம் சீராகாமல் அனைத்து மாநிலங்களிலும் செராமிக் டைல்ஸ் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் நிலவுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் வீடுகளுக்கு கிரகப்பிரவேசம் நடத்துவது வழக்கமாக உள்ளது. இந்த சமயத்தில் வீடுகளில் தளங்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும். தற்போது உள்ள எரிவாயு பற்றாக்குறை காரணமாக டைல்ஸ் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது 15 சதவீதம் அளவிற்கு டைல்ஸ்கள் விலையேற்றம் அடைந்துள்ளது.
இந்த விலையேற்றம் மேலும் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. போர் தொடர்ந்தால் டைல்ஸ்களுக்கு முழுமையான தட்டுப்பாடு ஏற்படுதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் கிரகப்பிரவேசம் உள்ளிட்டவை தள்ளி போகும் நிலை ஏற்படுவதுடன் இது தொடர்பான கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு அபாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இப்பிரச்னைகள் தொடர்பாக குஜராத் மாநில மார்பி செராமிக் உற்பத்தி நிறுவனங்களின் சங்க நிர்வாகிகள் கூடி விவாதித்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் செராமிக் நிறுவனங்கள் உற்பத்தியை துவக்க ஒன்றிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
