×

72 மணி நேர கெடு முடிந்தும் பெட்ரோல் பங்க்குகளில் மறைக்கப்படாத பிரதமர் மோடி படம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்களில் உள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள் உடனடியாக அகற்றப்பட்டு வருகின்றன. இருப்பினும், பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையங்களில், ஒன்றிய அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள சிரிக்கின்ற நிலையில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் உருவப் படங்களுடன் கூடிய பதாகைகள் இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளன.

தேர்தல் நடத்தை விதிகளின்படி, பொது இடங்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது ஆளும் கட்சியின் சாதனைகளை விளக்கும் விளம்பரங்கள் இருக்கக்கூடாது. கடந்த காலத் தேர்தல்களின் போதும், பெட்ரோல் நிலையங்களில் உள்ள பிரதமரின் படங்களை 72 மணி நேரத்திற்குள் அகற்ற தேர்தல் ஆணையம் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையிலும், பல மாவட்டங்களில் பெட்ரோல் பங்குகளில் பிரதமரின் படங்கள் அப்படியே காட்சியளிக்கின்றன.

இது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் என்றும், தேர்தல் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இந்தப் படங்களை அகற்றவோ அல்லது மறைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில், மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் சுவர் விளம்பரங்கள் மற்றும் அரசியல் பதாகைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெட்ரோல் நிலையங்களில் உள்ள படங்களும் விரைவில் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* விஜய்யுடன் எந்த பேச்சும் நடத்தல… ஆதவ்வா… அப்படி யாரையும் எனக்கு தெரியாது: நயினார் வீராப்பு
பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் வர உள்ளார். அதன் பின்னர்தான் தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும். அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை வைத்து யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் பாஜவுக்கு இல்லை. அவை அனைத்தும் சுதந்திரமான அமைப்பாகும். தவெக தலைவர் விஜய்யிடம் பாஜ எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது எனக்கு தெரியாது. கடந்த 2 நாட்களாக நெல்லையில் தான் உள்ளேன். சென்னை சென்றபின் அடுத்தக் கட்ட முடிவுகள் குறித்து அறிவிக்கப்படும். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்யவே 10 நாள் அவகாசம் உள்ளது.

பிரதமர் மோடி, கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு வர உள்ளார். அவர் வரும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் நிதின் நபீன் என அகில இந்திய தலைவர்கள் பலரும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட விரைவில் தமிழகம் வருகை தர உள்ளனர். எங்கள் கூட்டணிக்கு பல புதிய கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறினார். விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால், 90 தொகுதிகள், இரண்டரை முதல்வர் பதவி கொடுப்பதாக பேரம் பேசப்பட்டதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளாரே என்று கேட்டபோது, ‘ஆதவ்வா…. அவர் யார் என்று எனக்கு தெரியாது’ என்றார்.

Tags : PM Modi ,Election Commission of India ,Tamil Nadu ,
× RELATED இன்று மநீம செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது