காட்டுமன்னார்கோவில் அருகே காலி குடங்களுடன் கிராமமக்கள் திடீர் மறியல் போக்குவரத்து பாதிப்பு

காட்டுமன்னார்கோவில், பிப். 16: காட்டுமன்னார்கோவில் அருகே மேலபழஞ்சநல்லூர் கீழத்தெருவில் உள்ள 8வது வார்டில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. தனிநபர் ஒருவர் அவரது இடத்தில் குழாய் செல்லக்கூடாது என தெரிவிப்பதால் குடிநீர் செல்வதற்கு பாதை தடையாக இருந்து வருகிறது. பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம்  புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால்,  ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் நேற்று சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர் சென்று பொதுமக்களிடம் சமாதானம் பேசியும் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரும்வரை காத்திருக்கிறோம் என தெரிவித்ததால், காட்டுமன்னார்கோவில் ஒன்றிய கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து, சட்டப்படி ஆக்கிரமிப்பாளருக்கு ஒருமுறை அறிவிப்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நோட்டீஸ்கள் அளித்தும் ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் வட்டாட்சியர் முன்னிலையில் ஆக்கிரமிப்பை அகற்றி பொது குடிநீர் குழாயை அமைத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: