திட்டக்குடி, மார்ச் 17: ரியல் எஸ்டேட் புரோக்கர் உரிய ஆவணமின்றி காரில் எடுத்து வந்த ரூ.12 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த இறையூர் பஸ் நிறுத்தம் அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் கீர்த்தனா தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தனவேல், அருள்ராஜா ஆகியோர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணம் இன்றி ரூ.12 லட்சம் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.12 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, இதை எடுத்து வந்த அரியலூர் மாவட்டம் இருங்கலங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் வேல்முருகன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பறிமுதல் செய்த பணத்தை திட்டக்குடி தாசில்தார் உதயகுமாரிடம் ஒப்படைத்தனர்.
