விழுப்புரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் வெறுப்பை தூண்டும் வகையிலான பிரசாரம் செய்யக் கூடாது அனைத்து கட்சி கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை

விழுப்புரம், மார்ச் 17: விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரான, ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தின்போது எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ பல்வேறு சாதியையோ, மதத்தையோ அல்லது பல்வேறு மொழி பேசுபவர்களிடையில், வெறுப்பை தூண்டும் வகையிலோ அல்லது வேறுபாட்டை, பகைமையை வளர்க்கும் வகையான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

மற்ற அரசியல் கட்சிகள் குறித்த விமர்சனம் செய்யும்போது கட்சியின் கொள்கை குறித்தோ அல்லது கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தோ அல்லது அரசியல் தலைவர்களின் பொதுவாழ்க்கை அல்லது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இருத்தல் கூடாது. மற்ற அரசியல் கட்சிகளையோ அல்லது கட்சியின் ஊழியர்களையோ விமர்சனம் செய்யும்போது நிரூபனமாகாத ஊகத்தின் பெயரிலான குற்றச்சாட்டுகளை சுமத்துவது தவிர்க்க வேண்டும். வாக்கு சேகரிக்க சமுதாயம் மற்றும் சாதியை பயன்படுத்தக்கூடாது. வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சியோ பிரசார கூட்டம், பிரசாரத்திற்கு ஒலிபெருக்கி பயன்படுத்துவது, வாகனம், ஊர்வலம், தற்காலிக கட்சி அலுவலகம் மற்றும் இதர அனுமதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள இணையதள suvidha app மூலம் விண்ணப்பித்து முன்அனுமதிபெற வேண்டும். இதன் மூலம் காவல் துறையினர் உரிய வகையில் போக்குவரத்தை சரிசெய்யவும், சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கப்படும்.

தேர்தலுக்காக வேட்பாளர்கள் விண்ணப்பத்தினை தாக்கல் செய்யும் சமயத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரது அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 3 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும். வேட்பு மனுதாக்கல் செய்ய வேட்பாளரையும் சேர்த்து மொத்தம் 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்தல் பிரசாரங்கள் தேர்தல் நாளிற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு நிறுத்தப்பட வேண்டும். பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலம் நடத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது. கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் கல்வி நிலையங்களையோ அல்லது கல்வி நிலையங்களில் உள்ள விளையாட்டு மைதானத்தையோ அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான விளம்பரத்திற்கு பயன்படுத்தக்கூடாது. மேலும் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் அல்லது பாலித்தீன் கொண்டு விளம்பர சுவரொட்டி மற்றும் பேனர்கள் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. வேட்பாளரோ அல்லது அவரது கட்சியை சார்ந்தவர்களோ வாக்குப்பதிவு நாள் அன்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாக்காளர்களை வசிப்பிடத்திலிருந்து வாக்குச்சாவடிக்கோ அல்லது வாக்குச்சாவடியிலிருந்து வசிப்பிடங்களுக்கோ வாகனங்கள் மூலம் அழைத்து செல்லக்கூடாது.

இவ்வாறு செய்வது குற்றமாகும். அரசு கட்டிடங்களில் எந்த வகையான அரசியல் கட்சிகளின் விளம்பரங்களும் செய்யக்கூடாது. நகராட்சி, பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களிலோ, சுவர்களிலோ தேர்தல் விளம்பரம் செய்யக்கூடாது. கிராம ஊராட்சிகளில் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் விளம்பரம் செய்ய வீட்டின் உரிமையாளரிடம் அனுமதி பெற்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பித்து உரிய ஆணை கிடைக்கப்பெற்ற உடன் தேர்தல் விளம்பரம் செய்துகொள்ள அனுமதிக்கப்படும்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அரசு சொத்துகளில் இடம்பெற்றுள்ள அனைத்து சுவர் எழுத்துகள், சுவரொட்டிகள், தாள்கள் அல்லது ஏனைய யாதொரு வடிவத்திலான சுவரை உருக்குலைத்தல், உருவப்படங்கள், விளம்பர பலகைகள், பதாகைகள், கொடிகள் போன்றவை அகற்றப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ல் பிரிவு 127aன்படி எந்தவொரு நபரும், அச்சகத்தின் உரிமையாளர் மற்றும் வெளியிடுபவர் பெயர்கள் மற்றும் முகவரிகள் இல்லாத எந்தவொரு தேர்தல் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் அல்லது சுவரொட்டிகளை அச்சிடவோ, வெளியிடவோ கூடாது. எந்தவொரு நபரும் தேர்தல் தொடர்பான துண்டுப்பிரசுரத்தையும் அல்லது சுவரொட்டியையும் அச்சிட தேர்தல் வழிபாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எஸ்.பி சாய்பிரணீத், மாவட்ட வருவாய் அலுவலர் ஹரிதாஸ், ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பத்மஜா, பயிற்சி ஏஎஸ்பி மஞ்ஜிமா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: