×

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் டாக்டராக நடித்து செல்போன் நகை திருடிய 3 பேர் கைது: 12 கிராம் தங்கம், கார் பறிமுதல்

 

தண்டையார்பேட்டை: சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டாக்டர் போல் நடித்து நகை, செல்போன் திருடிச் சென்ற வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா(30). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தனது மாமியாருடன் இருந்தார்.

தொடர்ந்து, 6ம் தேதி தனது மாமியாரை அழைத்துக் கொண்டு மயக்கவியல் மருத்துவரை பார்க்க சென்றார். அப்போது, அங்கிருந்த நபர் ஒருவர் தன்னை மருத்துவர் என அறிமுகம் செய்து கொண்டு மருத்துவ ஆவணங்களை காண்பிக்குமாறு கூறியுள்ளார். அதன்பேரில், காஞ்சனா ஆவணங்களை அந்த நபரிடம் கொடுத்துள்ளார்.

பின்னர், 7ம் தேதி வார்டுக்கு வந்த அந்த நபர் மாத்திரைகள் வாங்க வேண்டும் என்று கூறி காஞ்சனாவை 7வது மாடிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, காஞ்சனாவிடம் நீங்களும் ஸ்கேன் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். மேலும், தங்க நகைகள், செல்போன் ஆகியவற்றை ஒரு பையில் போட்டு கொடுக்குமாறு கூறியுள்ளார்.

உடனே, காஞ்சனா தன் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தாலிச்சரடு, 2 கிராம் மோதிரம் மற்றும் செல்போனை ஒரு பையில் போட்டு கொடுத்தார். அதனை வாங்கிக் கொண்ட அந்த நபர் லாக்கரில் வைத்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். காஞ்சனா அங்கேயே காத்திருந்தார். நீண்டநேரமாகியும் அந்த நபர் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து காஞ்சனா அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை காவல் நிலைய குற்றப்பிரிவில் காஞ்சனா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், நகை திருட்டில் ஈடுபட்ட கோயம்புத்தூர் பிரஸ் காலனியை‌ சேர்ந்த ராஜேஷ் பிரித்வி(35), மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அரவிந்தன்(30), மணிகண்டன்(38) ஆகியோரை நேற்று கைது செய்து விசாரித்தனர்.

அதில், டாக்டர்கள் போல் நடித்து காஞ்சனாவிடம் இருந்து திருடிச் சென்ற நகைகளை விற்று கிடைத்த பணத்தில் தங்க நாணயங்கள் மற்றும் பழைய கார் வாங்கி ஊர் சுற்றியது தெரியவந்தது. இதில், ராஜேஷ் பிரித்வி மீது ஏற்கனவே 2 கொலை முயற்சி உட்பட குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதைடுத்து, போலீசார் 12 கிராம் எடை கொண்ட 2 தங்க நாணயங்கள், 1 கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Rajiv Gandhi Government Hospital ,Thandaiyarpet ,Rajiv Gandhi Government General Hospital ,Chennai ,Kanchana ,Kolathur ,
× RELATED இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு தர்ம அடி