×

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்கள், ஜம்மு யூனியன் பிரதேசத்துக்கு ரூ.1,912 கோடி கூடுதல் நிதியுதவி: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்கள், ஜம்மு யூனியன் பிரதேசத்துக்கு ரூ.1,912.99 கோடி கூடுதல் நிதியுதவியை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட கூட்டுக்குழு நேற்று கூடியது. இதில், 2025ம் ஆண்டில் வெள்ளம், திடீர் வெள்ளம், மேகவெடிப்புகள், நிலச்சரிவுகள் மற்றும் மோன்தா புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஆந்திரபிரதேசம், சட்டீஸ்கர், குஜராத், இமாச்சலபிரதேசம், நாகாலாந்து ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கு ரூ.1,912.99 கோடி கூடுதல் நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து வௌியிடப்பட்ட அறிக்கையில், “இந்த கூடுதல் நிதியுதவி தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தில் இருந்து அளிக்கப்பட்டுள்ளது. இது மாநில பேரிடர் நிவாரண நிதியத்தில் கிடைக்கும் ஆண்டிற்கான தொடக்க இருப்புத்தொகையில் 50% மறுசீரமைப்புக்கு உட்பட்டது. இந்த மொத்த தொகையில், ஆந்திரபிரதேசத்துக்கு ரூ.341.48 கோடியும், சட்டீஸ்கருக்கு ரூ.15.70 கோடியும், குஜராத்துக்கு ரூ.778.67 கோடியும், இமாச்சலபிரதேசத்துக்கு ரூ.288.39 கோடியும், நாகாலாந்துக்கு ரூ.158.41 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு ரூ.330.34 கோடி வழங்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் உதவித்தொகை, மாநிலங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மாநில பேரிடர் நிவாரண நிதியில் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்கிய நிதியை விட கூடுதலாகும். 2025-26ம் நிதியாண்டில், ஒன்றிய அரசு மாநில பேரிடர் நிவாரண நிதியின்கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,735.20 கோடியும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின்கீழ் 21 மாநிலங்களுக்கு ரூ.3,628.18 கோடியும் விடுவித்துள்ளது. கூடுதலாக, மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 23 மாநிலங்களுக்கு ரூ.5,373.20 கோடியும், தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 21 மாநிலங்களுக்கு ரூ.1,189.56 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, இயற்கை பேரிடர்கள் மற்றும் பேரழிவுகளின் போது மாநில அரசுகளுடன் தோளோடு தோள் நின்று தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Jammu Union Territory ,Union government ,New Delhi ,Union Home Minister ,Amit Shah ,
× RELATED தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம்...