×

பிளஸ் 2 மாணவி படுகொலை; 3வது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பிளஸ் 2 மாணவி கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இன்று 3வது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அடுத்த வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 2வது மகள் 12ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பொதுத்தேர்வை எழுதி வந்தார். கடந்த 10ம்தேதி இரவு வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மாணவி ஒரு மணி நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் காட்டுப்பகுதிக்கு தேடிச் சென்றனர். ஆனால் அவரை காணாததால் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை காட்டுப்பகுதியில் மாணவி முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது சடலத்தை மீட்ட போலீசார் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து ஆத்திரமடைந்த உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு குறுக்குச்சாலை – ராமேஸ்வரம் சாலையில் வேடநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். மாணவி மரணத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

புகார் கொடுக்கச் சென்ற போது அலைக்கழித்த குளத்தூர் காவல் நிலையம் மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி தெரிவித்ததையடுத்து மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இன்று 3வது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்களும், கிராம மக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவி கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Tags : Thoothukudi ,
× RELATED தாய்த்தமிழைக் காக்க எந்தத்...