வாஷிங்டன்: சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்துள்ளது. உலக நாடுகளுக்கு தேவைப்படும் கச்சா எண்ணெய்யில் 20 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இந்த முக்கிய வழித்தடத்தை ஈரான் முடக்கியதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு விலை கடும் உயர்வை சந்தித்தது. நேற்று முன்தினம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 120 டாலர் என்ற உச்சத்தை தொட்டது. இந்நிலையில், நேற்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 11.3 சதவீதம் சரிந்து 87.80 டாலராக குறைந்தது. சர்வதேச எரிசக்தி முகமை மற்றும் ஜி7 நாடுகளின் (கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா) எரிசக்தி அமைச்சர்கள் இணைந்து நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவால், இந்த விலை சரிவு ஏற்பட்டது. சுமார் 120 கோடி பேரல் எண்ணெய் கையிருப்பு உள்ள நிலையில், சந்தையை நிலைப்படுத்த 30 கோடி முதல் 40 கோடி பேரல் வரையிலான எண்ணெய்யை அவசரகால கையிருப்பிலிருந்து விடுவிக்க அமெரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, அமெரிக்க கடற்படை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் டாங்கர்களை பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதாக வெளியான தகவலால் விலை மேலும் சரிந்தது. பின்னர் அந்த தகவல் தவறானது என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது. இதுதொடர்பாக சர்வதேச எரிசக்தி முகமையின் தலைவர் பாத்தி பிரோல் கூறுகையில், ‘சர்வதேச எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய ஜி7 நாடுகளுடன் இணைந்து அவசர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம். உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை நிலைப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 87.80 டாலராகவும், டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் 83.45 டாலராகவும் வர்த்தகம் ஆகிறது. ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டிருந்தால் மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
