நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் குமார் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார்: கட்சியை பலப்படுத்த நடவடிக்கை என பேட்டி

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் ஜேடியு கட்சியில் சேர்ந்தார். கட்சியை பலப்படுத்த முடிவு செய்துள்ளதாக நிஷாந்த் தெரிவித்தார். பீகாரில் கடந்த நவம்பர் மாதம் பேரவை தேர்தல் நடந்தது. இதில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பாஜ-ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தலில் வெற்றி பெற்றதும் நிதிஷ் குமார் 10வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். அவர் ஆட்சி பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆன நிலையில் நிதிஷ் குமார் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மாநில முதல்வராக இருந்த நிதிஷ் திடீரென தேசிய அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ளது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதிஷின் இந்த திடீர் முடிவை அடுத்து பாஜ கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார். மாநிலத்தில் பல ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி நடந்த போதும் பாஜவை சேர்ந்தவர்கள் துணை முதல்வர்களாக இருந்துள்ளனர். யாரும் முதல்வராக பதவி வகிக்கவில்லை.

வட மாநிலங்களில் உள்ள பெரிய மாநிலங்களில் முக்கியமான பீகாரில் இதுவரை பாஜவினர் முதல்வராக இருந்தது இல்லை. நிதிஷின் ராஜினாமாவால் பாஜவுக்கு முதல்முறையாக முதல்வர் பதவி வாய்ப்பு கிடைத்துள்ளது. நிதிஷ் பதவி விலகினால் அவரது மகன் நிஷாந்த் குமார் துணை முதல்வராக பதவி ஏற்பார் என்றும் அவரது மகன் நிஷாந்த் குமார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நிதிஷின் மகன் நிஷாந்த் குமார் நேற்று ஜேடியு கட்சியில் சேர்ந்தார். அவரை கட்சியின் மூத்த தலைவர்களான ராஜிவ் ரஞ்சன் சிங், கட்சியின தேசிய தலைவர் சஞ்சய் ஜா ஆகியோர் வரவேற்றனர்.

கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிஷாந்த் குமார் ஜேடியுவில் உறுப்பினராக சேர்ந்தார். பின்னர் நிஷாந்த் கூறுகையில், என்னுடைய தந்தை மாநிலங்களவை எம்பியாக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார். அவருடைய தனிப்பட்ட இந்த முடிவை நாம் அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும். அவருடைய வழிகாட்டுதலின்படி நாங்கள் செயல்படுவோம். கட்சியை நாங்கள் பலப்படுத்துவோம் என்றார். நிஷாந்த் குமார் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்றும் அடுத்தமாதம் சட்ட மேலவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ஜேடியு எம்எல்ஏ ஹரிநாராயண் சிங் தெரிவித்தார்.

 

Related Stories: