கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் கொரோனா வார்டை ஒப்படைக்காததால் மரத்தடியில் பாடம் படிக்கும் மாணவர்கள்

கடலூர், பிப். 9: கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் செயல்பட்டு வந்த கொரோனா சிகிச்சை வார்டை சுத்தம் செய்து கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்காததால் பெரும்பாலான வகுப்பு மாணவ, மாணவிகள் நேற்று மரத்தடியில் அமர வைக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. இட பற்றாக்குறை காரணமாக சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரி கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தது. இங்குள்ள பெரும்பாலான வகுப்பறைகள் வார்டாக மாற்றப்பட்டு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கல்லூரி திறக்கப்பட்ட நிலையில் வார்டு பகுதிகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் நேற்று வரை  மாவட்ட நிர்வாகம் ஒப்படைக்க வில்லை.

இதுபற்றி கல்லூரி முதல்வர் கடிதம் அனுப்பியும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கொரோனா வார்டுகளை பிரிக்கும் போது கல்லூரி மாணவர்கள் அமரும் பெஞ்சுகளை தடுப்பாக பயன்படுத்தி பிரித்துள்ளனர். இதனால் மாணவ, மாணவிகள் அமர பெஞ்ச் மற்றும் வகுப்புகளுக்கு இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நேற்று பெரும்பாலான வகுப்புகள் மரத்தடியில் மாணவ, மாணவிகளை அமரவைத்து நடத்தப்பட்டது. மேலும் இட பற்றாக்குறை காரணமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கள், வியாழன், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வெள்ளி, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு புதன், சனி என சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Related Stories: