வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் கடந்த தேர்தலுக்கு முன்பு அதிமுக போட்டியிட்டது. அதிமுக பிரமுகர் லோகநாதன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர் கடந்த தேர்தலின்போது இந்த தொகுதியை அதிமுக கூட்டணிக்கு ஒதுக்கியது. அதன்படி தற்போது புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவாக உள்ளார். தற்போது இந்த தொகுதியில் மீண்டும் ஜெகன்மூர்த்தி போட்டியிட முடிவு செய்து அதற்காக, எடப்பாடியாரிடம் பேசி வைத்துள்ளாராம்.
அதேசமயம் ஏற்கனவே போட்டியிட்ட அதிமுக ஒன்றிய செயலாளர் லோகநாதன் போன முறையும் சீட்டு கேட்டு கிடைக்கவில்லை. அதனால் இந்த முறை எனக்கு மீண்டும் சீட்டு கொடுத்தே ஆக வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் மூலம் எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அதோடு முன்னாள் மேயரும், பாஜ மாநில பொதுச்செயலாளருமான கார்த்தியாயினி கடந்த முறையே கே.வி.குப்பம் தொகுதிக்கு சீட்டு கேட்டு கிடைக்கவில்லை. ஆனால் இந்த முறை எப்படியாவது கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி சீட்டு பெற்றே தீருவேன் என்று தன் பங்கிற்கு களத்தில் நிற்கிறார்.
இவர்களுடன், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த இந்திய குடியரசு கட்சி தலைவரும், முன்னாள் சபாநாயகருமான செ.கு.தமிழரசன் கடந்த 2011 தேர்தலில் கே.வி.குப்பத்தில் வெற்றி பெற்றார். தற்போது, இந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்ற ஆசையில் அவரும் அதற்கான வேலைகளை செய்து வருகிறார். மேலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியனும் கே.வி.குப்பத்தில் சீட்டு வாங்க முயற்சித்து வருகிறார்.
இதை தவிர உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் செந்தில்குமார், ரமேஷ்குமார், கோவிந்தசாமி உள்ளிட்ட 21 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். இப்படி ஒரு தொகுதிக்கு முக்கிய தலைவர்கள், நீயா, நானா என்று முட்டி மோதி கூட்டணிக்குள் குஸ்தி போட்டு வருகின்றனர். ேக.வி.குப்பத்தை சேர்ந்த மக்களோ, எப்போதும் எங்கள் தொகுதிக்கு வெளியூரை சேர்ந்தவர் தான் எம்எல்ஏவாக வர வேண்டுமா? எங்கள் ஊரை சேர்ந்தவர் வந்தால் தானே எங்களுக்கு நல்லது செய்வார், அரசியல் கட்சிகள் அதுகுறித்து யோசிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
