தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அனைத்து கட்சியினரும் தொகுதி பங்கீடு மற்றும் யாரை வேட்பாளர்களாக நிறுத்துவது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் விவசாயம் மற்றும் நெசவு தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இத்தொகுதியில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 84 வாக்காளர்கள் உள்ளனர்.
பவானி சட்டமன்ற தொகுதியில் வன்னியர் சமூக மக்கள் அதிகளவில் இருப்பதால், இந்த தொகுதியை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு ஒதுக்ககோரி அன்புமணி, எடப்பாடி பழனிசாமியிடம் அழுத்தம் கொடுத்துள்ளார். மேலும், பவானி தொகுதியில் கடந்த 2006ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்டு ராமநாதன் வெற்றி பெற்றுள்ளதால், இத்தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கினால், நிச்சயம் வெற்றி பெறுவோம் என உறுதியாக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது அதிமுகவினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையறிந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், பவானி தொகுதி சிட்டிங் எம்எல்ஏ.வுமான கே.சி.கருப்பணன், மாவட்டத்தில் எந்த தொகுதியை வேண்டுமானாலும் கூட்டணிக்கு ஒதுக்குங்கள். ஆனால், பவானி தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்க கூடாது என முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
மேலும், பவானி தொகுதியில் 2001, 2016, 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக சார்பில் நான் வெற்றி பெற்றுள்ளேன். எனவே, பவானி தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்கி, தன்னை தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என மாஜி அமைச்சர் தலைமையிடம் கதறியுள்ளார். இதனால், பாமகவுக்கு எந்த தொகுதியை ஒதுக்குவது என அதிமுக தலைமை குழப்பத்தில் உள்ளது.
