கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் விருத்தாசலம் தொகுதி பொதுமக்கள் பார்வையிலும், அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. இங்கு கடந்த கால தேர்தல்களில் அதிமுக, திமுக மாறிமாறி வெற்றி பெற்றுள்ளது. 2001ல் பாமகவில் களமிறங்கிய கோவிந்தசாமி முதன்முதலில் வெற்றி பெற்றார். ஆனால் அடுத்துவந்த 2006 பொதுத்தேர்தலில் நடிகர் விஜயகாந்த் (தேமுதிக) வெற்றிப் பெற்றதை தொடர்ந்து இத்தொகுதி ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தது.
அதன்பிறகு விஜயகாந்த் தொகுதி மாறிய நிலையிலும் 2011ல் தேமுதிகவில் முத்துக்குமாரும், 2016ம் ஆண்டு அதிமுக கலைச்செல்வனும் வெற்றிபெற்றனர். கடைசியாக 2021ல் நடந்த பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட எம்.ஆர்.ஆர் ராதாகிருஷ்ணன் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். வன்னிய சமுதாய வாக்கு வங்கிகள் அதிகமுள்ள இத்தொகுதியை 1996க்கு பிறகு திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கி வந்துள்ளது.
அசுர கூட்டணி பலத்தால் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில் நீண்ட நாட்களுக்குபின் தற்போது இத்தொகுதியில் போட்டியிட திமுகவினரும் விருப்பம் தெரிவித்து உள்ளனர். திமுக மேற்கு மாவட்ட செயலாளராகவும், தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சி.வெ.கணேன், இத்தொகுதியில் இப்போதே தேர்தல் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பம்பரமாக சுழல்வதால் கூட்டணி கட்சியினர் வெற்றி உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த முறை திமுக கூட்டணியில் இந்த தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தேமுதிக சார்பில் பிரேமலதா போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. விஜயகாந்தின் முதன்முதலில் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால், தேமுதிகவினர் இந்த தொகுதியை சென்டிமென்ட்டாக பார்க்கின்றனர். பாமக இதை தங்களது கோட்டை என கூறிவந்த நிலையில் தேமுதிக அதை உடைத்தெறிந்தது.
அதிமுக கூட்டணியில் பாமக(அ)வை சேர்ந்த மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், அதிமுகவில் மாவட்ட செயலாளர் அருண்மொழித் தேவன் ஆகியோரும் சீட் கேட்டு குறிவைத்துள்ளனர். ஆனால் கடைசிநேர வாய்ப்பு யாருக்கு? என்பது இறுதிகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே தெரியும் என்றாலும் அமமுகவும் இந்த தொகுதியை கேட்டு அடம் பிடித்து வருவதால் தேஜ அணியில் சலசலப்பு நீடிக்கிறது.
