கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி தொகுதி 2011 மறுசீரமைப்பிற்குபின் உருவானது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக வேல்முருகன் போட்டியிட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் சிவசுப்ரமணியன் 69,549 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். பின்னர் 2016 தேர்தலில் திமுக, அதிமுக, தவாக என மும்முனை போட்டி நிலவியது. இத்தேர்தலில் திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரன் வென்றார். தனிக் கட்சி தொடங்கி களமிறங்கிய வேல்முருகனுக்கு 3வது இடம் கிடைத்தது.
2021 சட்டசபை தேர்தலில் திமுகவில் போட்டியிட்ட சபா.ராஜேந்திரன் 977 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணியில் நின்ற பாமக ஜெகனை வீழ்த்தினார். வரும் தேர்தலில் திமுகவில் சபா.ராஜேந்திரன் மீண்டும் போட்டியிட மனு அளித்துள்ளார். அதேவேளையில் தவாக வேல்முருகனும் நெய்வேலி போட்டியிட விரும்புகிறார். அதிமுக கூட்டணியில் பாமக அன்புமணி அணியில் மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் சீட் கேட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் தொகுதிகளை முடிவு செய்வதற்கு முன்பே தொகுதி முழுவதும் களமிறங்கி தேர்தல் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
அதே நேரத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரனும் சீட்டு கேட்டு தலைமைக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். அத்தோடு அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சிவசுப்ரமணியனும் களமிறங்க ஆர்வம் காட்டி வருகிறார். சிதறிப்போன பாமகவால் வெற்றிபெற முடியாது எனக்கூறி இந்தமுறை அதிமுக களமிறங்கும் முடிவில் இருப்பதால் இப்போதே உள்குத்து வேலைகள் நெய்வேலியில் ஆரம்பித்து விட்டதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நெய்வேலியில் இந்தமுறை மாம்பழம் பழுக்குமா? என்ற கேள்வி இப்போதே அரசியல் வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளது.
