திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பவுர்ணமியொட்டி 2வது நாளாக இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று மாலை 6.29 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 5.52 மணிக்கு நிறைவடைகிறது. நேற்றிரவு முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை கோயில், இடுக்குப்பிள்ளையார் கோயிலை வழிபட்டபடி விடியவிடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அதிகாலை காலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று மாலை வரை பவுர்ணமி நீடிப்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் இன்றும் சிறப்பு தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பொது தரிசனம் மட்டும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் கோயில் வெளிபிரகாரம் வடஒத்தவாடை தெரு, இரட்டை பிள்ளையார் கோயில் தெரு வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகு தரிசனம் செய்தனர். கிரிவலம் முடிந்த பக்தர்கள் சிறப்பு பஸ்கள் மூலம் தங்களது ஊர்களுக்கு சென்றனர். விழுப்புரம், காட்பாடி வழித்தடங்களில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் கூட்டம் அலைமோதியது. ரயிலில் இடம் பிடிக்க பக்தர்கள் முண்டியடித்து ஏறினர். இதனால் குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள், முதியவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சந்திர கிரகணத்திற்கு நடை அடைப்பு இல்லை;
சந்திர கிரகணம் இன்று மாலை 3.20 மணிக்கு தொடங்கி இரவு 6.45 மணிக்கு நிறைவடைகிறது. சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணத்தின்போது பெரும்பாலான கோயில்களில் நடை அடைப்பது வழக்கம். ஆனால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கிரகண நாட்களில் கோயில் நடை அடைப்பது இல்லை. பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சூரிய கிரகணம் தொடங்கும்போதும், சந்திர கிரகணம் முடியும்போதும் அண்ணாமலையார் கோயிலில் உள்ள குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். அதன்படி இன்று சந்திர கிரகணத்தின்போது நடைஅடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல் கிரகணம்முடியும்போது கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் சூல நாதருக்கு தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
