வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் திருச்செந்தூரில் இன்று காலை மாசித் திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் மாசித் திருவிழா பத்தாம் நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி மற்றும் மாசிப் பெருந்திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது. இவ்வாண்டு மாசித் திருவிழா கடந்த பிப். 21ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதி உலா வந்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கடந்த பிப். 27ம்தேதி ஏழாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி தங்கச் சப்பரத்திலும், பிப். 28ம்தேதி எட்டாம் திருவிழா காலை சுவாமி வெள்ளைச் சாத்தி வெள்ளிச் சப்பரத்திலும், பகலில் பச்சை சாத்தி கடைசல் சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து, நேற்று காலை திருக்கோயில் சேர்ந்தார். தொடர்ந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் அலைவாயுகந்தபெருமான் தனித்தனி வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு நேற்று பகலில் சுவாமி பல்லக்கிலும், இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்கக் கயிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. காலை 7 மணிக்கு பிள்ளையார் தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. தொடர்ந்து காலை 7.45 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து நிலைக்கு வந்தது. அதன்பின் தெய்வானை அம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து நிலைக்கு வந்தது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: