ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல் போனவர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

*திருப்பத்தூர் கலெக்டருக்கு நன்றி

திருப்பத்தூர் : மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல் போன ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். திருப்பத்தூர் வெங்களாபுரம் அடுத்த வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் கடந்த மாதம் அழுக்கான ஆடைகளுடன் மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சுற்றித்திரிந்தார்.

அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சி விளையாடினார். இதைபார்த்த அப்பகுதி மக்கள் குழந்தையைக் கடத்த வந்தவரோ? என அஞ்சி திருப்பத்தூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

நகர காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி உத்தரவின் பேரில் அந்த நபரை பிடித்து உதவும் உள்ளங்கள் மனநல காப்பகத்தில் மனநல மருத்துவரின் சான்றின் பேரில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து வழங்கப்பட்ட மருந்து, மாத்திரைகள், மனநல சிகிச்சை மற்றும் ஆலோசனையின் பேரில் அவருக்கு ஓரளவு நினைவு திரும்பியது.

அதில், அவர் தனது பெயர் பாரஸ்நாத் போக்தா என்றும், தான் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்தனர். அதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், அவர் ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கர்ஹ் மாவட்டம், கோலா தாலுக்கா சேரங்கட்டு பகுதியைச் சேர்ந்த பாரஸ்நாத் போக்தா(52) என்பதும், இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் உள்ளதும், கடந்த 1 மாதத்திற்கு முன்பு காணாமல் போனதும் கண்டறியப்பட்டது.

இதற்கிடையில், பல்வேறு முயற்சிகளுக்கிடையில் அவரது குடும்பத்தினர் கண்டறியப்பட்டு, அவர்களை திருப்பத்தூருக்கு வரவழைக்கப்பட்டனர். அதன்படி, பாரஸ்நாத் போக்தாவின் மகன் ஜாமன்லால் போக்தா மற்றும் சகோதரர் அங்கத் குமார் போக்தா ஆகியோர் நேற்று திருப்பத்தூருக்கு வந்தனர்.

அவர்களிடம் பாரஸ்நாத் போக்தாவை ஒப்படைத்த உதவும் உள்ளங்கள் மனநல நிர்வாகி ரமேஷ் அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறும் மருத்துவரிடம் காண்பித்து, மருத்துவரின் ஆலோசனையின்படி பராமரிக்குமாறும் அறிவுரை கூறினார்.

முன்னதாக தந்தை பாரஸ்நாத் போக்தாவை நேரில் கண்ட அவரது மகன் ஜாமன்லால் போக்தா(26) கண்ணீர் மல்க கூறியதாவது: என் தந்தை சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். நானும் எனது தந்தையார் மற்றும் எனது சகோதரர் ராமன்லால் போக்தா ஆகிய 3 பேரும் வேலை தேடி ஜார்க்கண்டிலிருந்து, திருப்பூர் வந்தபோது பொம்மிடி அருகில் எனது தந்தை காணாமல் போய்விட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.

இதற்கிடையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உதவும் உள்ளங்கள் மனநல காப்பகத்தில் அவர் தங்க வைக்கப்பட்டு மனநல சிகிச்சையில் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதை கேட்டு நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என் தந்தையை மீட்டு தந்த தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: