மீனம்பாக்கம்: இஸ்ரேல்- ஈரான் போர் பதற்றம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாகிய நேற்று, துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய 17 புறப்பாடு விமானங்கள், அந்த நாடுகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 16 வருகை விமானங்கள் என மொத்தம் 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நேற்று திடீரென தாக்குதல்களை நடத்த தொடங்கியதை அடுத்து, ஈரான் பதிலுக்கு அமெரிக்காவின் ஏவுதளங்கள் இருக்கும் பகுதிகளில் தாக்குதலை நடத்த தொடங்கியது. இதையடுத்து மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் தங்களுடைய வான்வழிப் பகுதிகளை மூடிவிட்டது. இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட்டுக்கு இயக்கப்படும் 16 வருகை விமானங்களும், அதேபோல் புறப்பாடு விமானங்கள் 12 என மொத்தம் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று இரண்டாம் நாளாக தொடர்ந்து வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றுக்கு புறப்பட்டு செல்லும் விமானங்கள், அங்கிருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டன.
இரண்டாம் நாளாகிய நேற்று சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, பக்ரைன், குவைத், மஸ்கட் உள்ளிட்ட 17 புறப்பாடு விமானங்கள், அதேபோல இந்த நாடுகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 16 வருகை விமானங்கள் என மொத்தம் 33 விமானங்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த விமானங்கள் ரத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதோடு லண்டன், அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை வரும் பல்வேறு விமானங்கள், ஈரான், மத்திய கிழக்கு நாடுகளின் வான் வொளிகளை கடந்து வரவேண்டிய நிலையில் உள்ளது. ஈரான் உள்ளிட்ட நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால் மாற்றுப் பாதைகளில் சுற்றி வருவதால், அந்த விமானங்கள் சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் புறப்பட்டு செல்வதற்கு பல மணி நேரம் தாமதம் ஆகலாம் அல்லது விமானம் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே மற்ற விமானங்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளும் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய இருக்கும் பயணிகள், அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்கள் வரும் நேரம், மீண்டும் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் நேரம் போன்றவைகளை தெளிவாக தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளனர்.
