×

கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க சாத்தியகூறுகள் ஆய்வு

*விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரி தகவல்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று டிஆர்ஓ தனலிங்கம் தலைமையில் நடந்தது. வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ராமன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பிரபாகரன், நேர்முக உதவியாளர் ராஜராஜன், ஆர்.டி.ஓ ராஜூ, நேர்முக உதவியாளர்(நிலம்) சுமதி ஆகியோர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினை சேர்ந்த விவசாயிகள், ‘நெமிலி, பனப்பாக்கம், லட்சுமிபுரம், பெருவளையம் போன்ற கிராமங்களிலும் மற்றும் அனைத்து வருவாய் கிராமங்களிலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர்.அதற்கு பதிலளித்த அதிகாரி, ‘நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் ஆராய்ந்து அதனடிப்படையில் அமைத்துத்தர வழிவகை செய்யப்படும்’ என்றார்.

தொடர்ந்து விவசாயிகள்: விவசாய விளை நிலங்களுக்கு நீர் வழி ஓடைகள் மற்றும் பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்றப்பட வேண்டும். ஆவின் நிர்வாகத்தின் மூலம் வழங்கப்படும் தயிர் மற்றும் பால் பொருட்களை தரம் உயர்த்த வேண்டும். அய்யந்தாங்கல் கிராமத்தில் விவசாயிக்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி நிறுத்தப்பட்டுள்ளது.

நிதி கிடைக்க செய்ய வேண்டும். மங்களம் கசக்கால்வாய் பகுதியில் பயிர் செய்யப்படும் விளை நிலங்களுக்கு செல்ல வழி இல்லை. பாதை அமைத்து தர வேண்டும். அங்கு சிறு பாலம் அமைத்து தர வேண்டும். தாமரைப்பாக்கம் கிராமத்தில் நீர் வழி ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்ற வேண்டும்.

கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்க வேண்டும். ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதனை அகற்ற வேண்டும். முப்பது வெட்டி கிராமத்தில் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் வீடு வழங்க வேண்டும். நவ்லாக் பகுதியில் மண் திருட்டை தடுக்க வேண்டும். நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அகற்ற வேண்டும்.

என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதற்கு பதலளித்த அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க துறைச் சார்ந்த அலுவலர்களை டி.ஆர்.ஓ தனலிங்கம் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ranipet ,Ranipet Collector ,TRO Thanalingam ,Sundaram ,Raman ,
× RELATED திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி...