டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கிலிருந்து முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுவித்து சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதாரமின்றி வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரியின் மீது துறைவாரியாக விசாரணை நடத்த நீதிமன்றம் அணையிட்டுள்ளது. டெல்லியில் முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியின்போது மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக்கூறி அம்மாநில முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிஷோடியா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிஷோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கிலிருந்து முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைப்போன்று முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிஷோடியா உள்ளிட்ட 23 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லாமல் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ததாக சி.பி.ஐ மீது டெல்லி நீதிமன்றம் கடும் குற்றம் சாட்டியுள்ளது. யூகத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், சதித்திட்டம் திட்டப்பட்டதாக சிபிஐ கூறிய புகார் ஆதாரமற்றது என்ற சிபிஐ மீது நீதிபதி கடும் கண்டணம் தெரிவித்துள்ளார். ஒப்புதல் வாக்கு மூலம் என்ற அடிப்படியில் விசாரணை நடத்தியது அரசிலமைப்பு சட்டங்களுக்கு எதிரானது, சட்டங்களை மீறும் செயல் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.
ஆதாரம் இன்றி வழக்குப் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசு ஊழியர் குல்தீப் சிங் மீது ஆதாரம் இன்றி வழக்கில் சேர்க்கப்பட்டது குறித்து சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் பரிந்துரை வழங்கியுள்ளது.
