×

மத்திய பிரதேசத்தில் அரசியல் குழப்பம்; எதிர்க்கட்சி துணைத்தலைவர் திடீர் ராஜினாமா: ராஜ்யசபா தேர்தலில் காங். வாய்ப்பு பறிபோகுமா?

போபால்: ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற தேவையான பலத்தை திரட்டுவதில் அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 ராஜ்யசபா இடங்களுக்கு வரும் மார்ச் 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவார், பீகாரில் மாநிலங்களவை துணை தலைவரான ஹரிவன்ஷ் நாராயண் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், தெலுங்கானா, சட்டீஸ்கர், அரியானா மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அசாம் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் பூபேன் போரா பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அங்குள்ள பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாற வாய்ப்புள்ளதால் அக்கட்சிக்கு கூடுதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா இடங்களுக்கு கடும் அரசியல் போட்டி நிலவி வரும் நிலையில், ஒரு உறுப்பினர் வெற்றி பெற 58 முதல் விருப்பு வாக்குகள் தேவைப்படுகிறது. 165 எம்எல்ஏக்களை வைத்துள்ள பாஜக 2 இடங்களில் எளிதாக வெற்றி பெறுவதுடன், அக்கட்சியிடம் மீதமுள்ள 49 வாக்குகளுடன் கூடுதலாக 9 வாக்குகள் கிடைத்தால் 3வது இடத்தையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது.

இக்கட்டான இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஹேமந்த் கட்டாரே தனது பதவியை திடீரென ராஜினாமா செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 64 எம்எல்ஏக்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியில் 58 பேர் உறுதியாக வாக்களித்தால் மட்டுமே ஒரு இடத்தை தக்கவைக்க முடியும் என்ற நிலையில், ஹேமந்த் கட்டாரே தனது நிலைப்பாடு குறித்து கூறுகையில், ‘தனிப்பட்ட காரணங்களுக்காக எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன்; பாஜகவில் இணையும் திட்டம் குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இருந்தாலும், திடீரென எதிர்கட்சி துணை தலைவர் பதவியை ஹேமந்த் கட்டாரே விலகியதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Madhya Pradesh ,Congress ,Rajya Sabha ,Bhopal ,Rajya Sabha elections ,Tamil Nadu… ,
× RELATED திமுக கூட்டணியில் நீடிப்பதே...