திருச்சி: திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் அளித்த பேட்டி: அதிமுக-பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக கடந்த முறை தொகுதிகளை குறைத்துக்கொண்டு போட்டியிட்டோம். இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் மாநிலக்குழு முடிவு.
ஆகவே இரட்டை இலக்க தொகுதிகளை இம்முறை கேட்டுப்பெறுவோம். காங்கிரஸ், திமுக அணியை விட்டு வெளியேற கடுகளவு வாய்ப்பு கூட கிடையாது. இந்தியா கூட்டணி தொடர வேண்டுமெனில் காங்கிரஸ், இந்த அணியில் தான் இருந்தாக வேண்டும். சீட்டுகளை கூடுதலாக கேட்பது அந்தந்த கட்சியின் முடிவு. காங்கிரஸ் இந்த கூட்டணியில் நீடிப்பது கூட்டணிக்கு நல்லது. காங்கிரஸ் கட்சிக்கும் நல்லது.
அதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக, தமாகா ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். பாஜகவுடன்தான் பேசுவோம் எனக்கூறி வருகின்றன. எனவே இந்த கூட்டணி தொடருமா என்பது சந்தேகம் தான். கரூர் துயர சம்பவத்துக்கு விஜய் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும். தப்பித்துச்செல்வது ஒரு தலைவனுக்கு அழகல்ல. இவ்வாறு சண்முகம் கூறினார்.
