புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்த விதிமுறைகள் குறித்த பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த பரஸ்பர வரி உயர்வுகள் செல்லாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தெரிவித்தது. இதையடுத்து உலக நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரியை 10 சதவீதமாக குறைத்த டிரம்ப், பின்னர் அதை 15 சதவீதமாக அதிகரித்து உத்தரவிட்டார். இந்த வரி விதிப்புகளை 150 நாள்களுக்குள் சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் இந்தியா அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இன்று தொடங்கி 3 நாள்கள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வௌியாகி இருந்தது. இருநாடுகளுக்கு இடையேயான வரைவு வர்த்தக ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி விகிதம் 18 சதவீதமாக குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்த இறுதி பேச்சுவார்த்தைக்கான தேதியை தள்ளி வைக்க இந்தியாவும், அமெரிக்காவும் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வௌியாகி உள்ளன. இதுகுறித்து, “உலக நாடுகள் மீதான வரி விதிப்பு மீது அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அதன் பின்னர் அமெரிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் தாக்கம் பற்றி ஆராய்வதற்கு அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, இருநாடுகளிடையேயான வர்த்தக ஒப்பந்த விதிமுறைகளை இறுதி செய்ய திங்கள்கிழமை(இன்று) வாஷிங்டன்னில் நடைபெற இருந்த மூன்று நாள் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஒத்தி வைப்பது என இருநாடுகள் சார்பாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் ஏற்ற புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என ஒன்றிய வர்த்தக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
