×

தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (21.2.2026) மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நடைபெற்ற அரசு விழாவில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையில் 213 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்” மற்றும் திருமங்கலம் – கள்ளிக்குடி இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே கடவிற்கு மாற்றாக 38 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள “வீரபாண்டிய கட்டபொம்மன் சாலை மேம்பாலம்” ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மதுரை தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்” திறப்பு

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணிக்கான கட்டுமானப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 30.10.2023 அன்று தொடங்கி வைத்தார்.

கோரிப்பாளையம் சந்திப்பானது மதுரை மாநகரின் வடபகுதியையும் தென்பகுதியையும் இணைக்கும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மிக முக்கிய சந்திப்பாகும். இப்பாலத்தின் ஏறுதளம் தமுக்கம் பகுதியில் தொடங்கி கோரிப்பாளையம் சந்திப்பை கடந்து, வைகை ஆற்றில் ஆல்பர்ட் விக்டர் பாலத்திற்கு இணையாக புதிதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் இறங்கும் வகையில் 1305 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை மொத்தம் 39 மேல்தளப் பணிகள் (Deck Slab) அமைக்கப்பட்டுள்ளது.

தமுக்கம் முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரை சேவைச் சாலை பாலத்தின் இடதுபுறத்தில் 7.50 மீட்டர் அகலத்திற்கு இரண்டு வழிதடமாகவும், வலது பகுதியில் 10.50 மீட்டர் அகலத்திற்கு மூன்று வழிதடமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. சேவைச்சாலையின் எல்லையில் மழைநீர் வடிகால் மற்றும் பேருந்து நிறுத்தத்திற்காக தனி வழிதடம் அமைக்கப்பட்டுள்ளது.

தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை பாலத்தின் அணுகு சாலை அமைத்தல், பாலத்தின் கீழ் இருபுறமும் சேவைச் சாலை அமைத்தல், வர்ணம் பூசுதல், மின்விளக்கு பொருத்துதல் மற்றும் தடுப்பு சுவர் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான பிரதான மேம்பாலம் 213 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு, இப்பாலத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 16.2.2026 அன்று “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்” என்று பெயர் சூட்டப்பட்டது. இச்சிறப்புமிக்க பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.

மதுரை நகரின் மிகப் பரபரப்பான சந்திப்புகளில் ஒன்றான கோரிப்பாளையம் சந்திப்பில் கட்டப்பட்ட இம்மேம்பாலம், செல்லூர், தல்லாகுளம், தமுக்கம், நெல்பேட்டை, அண்ணாநகர் மற்றும் மதுரை மத்திய பகுதிகளுக்கிடையேயான போக்குவரத்தை எளிதாக்கி, பொதுமக்களின் பயண நேரத்தை குறைப்பதுடன், சாலை பாதுகாப்பையும் மேம்படுத்தும். மேலும், அவசர சேவை வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் விரைவாகச் செல்ல வழிவகுப்பதன் மூலம் நகரின் மொத்த போக்குவரத்து திறன் மற்றும் நகர்ப்புற இணைப்பை மேம்படுத்தும்.

திருமங்கலம் -கள்ளிக்குடி இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே கடவிற்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள “வீரபாண்டிய கட்டபொம்மன் சாலை மேம்பாலம்” திறப்பு

திருமங்கலம் – கள்ளிக்குடி இரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள இரயில்வே கடவு எண் 377 நகராட்சி சாலையில் அமைந்துள்ளது. இந்த இரயில்வே கடவில் தினமும் சுமார் 50 முறை இரயில்வே கேட் திறந்து மூடப்படுகிறது இதனால் திருமங்கலத்திலிருந்து விமான நிலையத்துக்கு செல்பவர்களும், விமான நிலையத்திலிருந்து திருமங்கலம் வருபவர்களும் இந்த இரயில்வே கேட்டில் நின்று செல்ல வேண்டியிருப்பதால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுத்துவதோடு நேர விரயமும் ஏற்படுகின்றது.

இதை தவிர்க்கும் பொருட்டு, திருமங்கலம் – கள்ளிக்குடி இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே கடவு எண் 377- க்கு மாற்றாக சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு 38 கோடியே 81 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது மேம்பாலத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்றுள்ளது.

இந்த புதிய சாலை மேம்பாலத்திற்கு “வீரபாண்டிய கட்டபொம்மன் சாலை மேம்பாலம்” என்று பெயர் சூட்டப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்த மேம்பாலமானது 582 மீட்டர் நீளத்தில், நெடுஞ்சாலை பகுதியல் 11 மற்றும் இரயில்வே பகுதியில் 3, என மொத்தம் 14 மேல் தளப்பணிகள் (Deck Slab) கொண்டுள்ளது. இப்பாலத்தின் இடதுபுறம் மற்றும் வலதுபுறம் வடிகால் வசதியுடன் கூடிய பயனுறு சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாலத்தில் அணுகு சாலை, பாலத்தின் கீழ் இருபுறமும் பயனுறு சாலை, வர்ணம் பூசுதல் மின்விளக்குகள் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்மேம்பாலம் திறக்கப்பட்டதன் மூலம், திருமங்கலத்திலிருந்து விமான நிலையம் மற்றும் மதுரை விமான நிலையத்திலிருந்து திருமங்கலம் செல்லும் மார்க்கத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லாமலும் நேர விரயமின்றியும் பொதுமக்கள் பயணிக்க முடியும். இதனால் திருமங்கலம், ஆலங்குளம், விடத்தக்குளம் மக்கள் பெரிதும் பயனடைவர்.

Tags : Tamukkam ,Nelpet ,Netaji Subhash ,Chandra Bose Bhosale ,MLA ,K. Stalin ,Chennai ,Chief Minister of ,Tamil ,Nadu ,Madurai District, Thirumangala ,Highways and Small Ports Department ,Tamukam ,Nelpet Anna Statue ,
× RELATED மதுரையில் வண்டியூர் பூங்கா,அங்கூரான்...