சென்னை: சென்னையில் 2வது நாளாக புறநகர் மின்சார ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். எழும்பூர் நடைமேடை சிக்னலுக்காக நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சேத்துப்பட்டில் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம். எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்புப் பணிகளால் தற்காலிக மாற்றங்களுக்கு ஒத்துழைக்க ரயில்வேத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறைக்கப்பட்ட சேவைகள், புதிய இயக்க முறை காரணமாக கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை – தாம்பரம் மின்சார ரயில் வழித்தடத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஏப்.5-ம் தேதி வரை புறநகர் ரயில் சேவைகள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கமாக தினமும் 204 முறை எழும்பூர் வழியாக மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதாவது, ஒவ்வொரு 10-12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக எழும்பூரில் வழக்கமாக புறநகர் ரயில்கள் நின்று செல்லும் 10 மற்றும் 11-வது நடைமேடைக்கு பதிலாக, 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் ரயில்கள் நின்று செல்லும் என்றும், 204 முறை ரயில்கள் இயக்கப்படுவதற்கு பதில், 164 முறை மட்டுமே இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ரயில் சேவைகள் குறைக்கப்பட்டதால் நேற்று காலை முதல் பயணிகள் பாதிப்புக்குள்ளாகினர். இதற்கிடையே சிக்னல் பிரச்சினை காரணமாக நேற்று அதிகாலையில் இருந்தே, கடற்கரை முதல் தாம்பரம்வரை இயக்கப்பட்ட புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஒரே
தண்டவாளத்தில் 2 ரயில்கள் எதிரெதிராகவும், ஒன்றன்பின் ஒன்றாகவும் என பல்வேறு குளறுபடிகளும் ஏற்பட்டன. இதன் காரணமாகபள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்புப் பணிகளால் தற்காலிக மாற்றங்களுக்கு ஒத்துழைக்க ரயில்வேத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. பயணிகள் வசதி, உட்கட்டமைப்பை மேம்படுத்த எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடற்கரை – தாம்பரம் புறநகர் ரயில் சேவையில் ஏப்.5 வரை தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள தற்காலிக சிரமத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும்
