புதுடெல்லி: ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏஐ தாக்க உச்சி மாநாடு கடந்த 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், பல்வேறு நாடுகளின் தலைவர்கள், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சில ஏஐ மாநாட்டின் கண்காட்சி அரங்கத்திற்குள் புகுந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோர் படங்களை அச்சிட்டிருந்த டிசர்ட் அணிந்திருந்தனர். அதில் இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஆவணங்கள்,பிரதமர் மோடி சமரசம் செய்துள்ளார் என எழுதியிருந்தது.
அவர்கள் மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.அதை தொடர்ந்து அவர்கள் சட்டைகளை கழற்றி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதங்கள்,கைகலப்பு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அரங்கிற்கு வெளியே பாதுகாப்பை அதிகரிக்க போவதாகவும் ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுப்பதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
* ‘மூளையின்றி, வெட்கமின்றி..’ பாஜ கண்டனம்
காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தை பாஜ கடுமையாக சாடியுள்ளது. டெல்லியில் செய்தியார்களை சந்தித்த பாஜ செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா,”காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எனக்கு மூன்று வார்த்தைகள் மட்டுமே உள்ளன. மேலாடையின்றி, மூளையின்றி, வெட்கமின்றி. ராகுல்காந்தியின் கட்டளைப்படியே இளைஞர் காங்கிரஸ் போராட்டத்தை நடத்தியுள்ளது. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் தற்செயலாக அங்கு வரவில்லை. முன்கூட்டியே அந்த இடத்திற்குள் நுழைவதற்கான பார் குறியீட்டைப்பெற்றனர். முழுத்திட்டமும் ராகுல்காந்தி, சோனியாகாந்தி மற்றும் பிரியங்கா காந்தி முன்னிலையில் செய்யப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.
