புதுடெல்லி: இந்தியா-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என ஒன்றிய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். கடந்த ஆண்டுஅமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்த டிரம்ப், இந்தியாவின் அதிக வரிவிதிப்பை கடுமையாக விமர்சித்தார். இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் அதிகபட்சமான 50 சதவீத வரி விதித்தார். இதில் வர்த்தக பற்றாக்குறைக்காக 25 சதவீத வரியும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவீத வரியும் விதித்தார். இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி சரிவை சந்தித்தது. அதே சமயம் வரியை குறைக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள அமெரிக்காவுடன் இந்தியா பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது.
இதன் பலனாக இந்தியாவுக்கான 50 சதவீத வரியை அமெரிக்கா 18 சதவீதமாக குறைக்க சம்மதித்துள்ளது. கடந்த 2ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியுடன் நடத்திய தொலைபேசி மூலம் நடத்திய உரையாடலில் வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியா-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என ஒன்றிய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நேற்று பேட்டியளித்த அவர், இந்த ஒப்பந்தம் மார்ச் மாதத்தில் கையெழுத்திடப்பட்டு ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்தப்படும்.இங்கிலாந்து மற்றும் ஓமனுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தம் ஏப்ரல் மாதத்தில் அமலாகு. நியூசிலாந்துடனான ஒப்பந்தம் செப்டம்பரில் செயல்படுத்தப்படும் என்றார்.
* இந்தியா-அமெரிக்க அதிகாரிகள் 3 நாள் கூட்டம்
இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான சட்ட உரையை இறுதி செய்வதற்காக இந்திய- அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையேயான மூன்று நாள் கூட்டம் பிப்ரவரி 23ம் தேதி அமெரிக்காவில் தொடங்கும் என்று ஒரு அதிகாரி நேற்று தெரிவித்தார். இந்திய குழுவுக்கு வர்த்தக அமைச்சகத்தின் இணைச் செயலாளர் தர்பன் ஜெயின் தலைமை தாங்குவார்.இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், இரு தரப்பினரும் தங்களுக்குள் வர்த்தகம் செய்யப்படும் பொருட்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவார்கள்.
